கொரோனா வைரஸ் தொற்று ஒழியும் வரை கீழமை நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணை தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று ஒழியும் வரை
கீழமை நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணை
தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் கோரிக்கை
சென்னை, ஏப்.22-
கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக ஒழியும் வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து
கீழமை நீதிமன்றங்களிலும் காணொலி காட்சி  மூலம் அவசர வழக்குகளை மட்டும்
விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை
நீதிபதிக்கு, பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை கடிதம்
அனுப்பியுள்ளார்.
ஐகோர்ட்டு மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து நீதிமன்ற
பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முக்கிய வழக்குகள் மட்டும்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை
ஐகோர்ட்டில் கடந்த வாரம் அவசர வழக்குகள் விசாரணை நடந்தபோது, கோர்ட்டில்
ஆஜராகி இருந்த அரசு வக்கீல்கள் அலுவலக உதவியாளருக்கு உடல் நலம்
பாதித்தது. அவரை பரிசோதித்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு இழுத்து மூடப்பட்டது. ஐகோர்ட்டு வளாகம்
முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல்
அவசர வழக்குகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும்
என்றும் ஐகோர்ட்டு அறிவித்தது.
சாத்தியம் இல்லை
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் எழுதியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கினால் தமிழக நீதிமன்றங்கள் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல்
செயல்படாமல் போனதால், இதை ஈடு செய்யும் விதமாக வருகிற மே 1-ந்தேதி முதல்
31-ந்தேதி வரை அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறையை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மே 1-ந்தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களும் வழக்கம் போல் செய்யப்படும்
என்றும்  ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் முற்றிலுமாக ஒழிந்து, சகஜ நிலைக்கு
தமிழகம் வரும் வரை நீதிமன்றங்கள் வழக்கம் போல் செயல்பட முடியாது. இது
உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினை என்பதால் மே 1-ந்தேதி முதல்
நீதிமன்றங்கள் செயல்படுவது என்பது சாத்தியம் இல்லாதது.
காணொலி காட்சி
கொரோனா தொற்று தொடர்பாக ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த அண்மை சம்பவம்,
மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், எதிர்காலத்தில்
நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த தொற்று
ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சம்  ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க
போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை. கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும்
ஒழிந்து, நாடு சகஜ நிலைக்கு வந்து விட்டது என்று மத்திய அரசு அறிவிக்கும்
வரை கீழமை நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகளை மட்டும் காணொலி காட்சி மூலம்
விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி மாநில அரசுகளின் உதவியுடன் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்
காணொலி காட்சி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து வக்கீல்கள்
சார்பிலும் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
………………………….

You may also like...