டாக்டர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு

டாக்டர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்களை
குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு
விரைவில் விசாரணை
சென்னை, ஏப்.21-
கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த டாக்டரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய
விடாமல் தடுத்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில்
விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறியிருப்பதாவது:-
டாக்டர் இறப்பு
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்
பணியாளர்கள்  ஊடகத்துறையினர் மற்றும் அத்தியாவசிய துறையினர் இரவு, பகல்
பாராது போராடி வருகின்றனர். இதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ
பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது சேவையாற்றி
வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக சென்னை நரம்பியல் நிபுணரும்,
30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த டாக்டருமான சைமன் ஹெர்குலஸ் தனியார்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய
நேற்று முன்தினம்  கீழப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு எடுத்துச்
சென்ற போது அப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். கற்களை வீசி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதில் உடன் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்களும்
தாக்கப்பட்டுள்ளனர். கடைசியில் போலீசார் உதவியுடன் அவரது உடல் வேறு ஒரு
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள் இறந்தால்
அவர்களை மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு கூட பொதுமக்கள் மறுத்து
தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயலாகும். அத்தியாவசிய பொருட்களை
வாங்க வரும் பொதுமக்களையும், சிறுவியாபாரிகளையும் குண்டர் சட்டத்தில்
கைது செய்வோம் என்று மிரட்டுவது. பல மணி நேரம் பிடித்து வைப்பது. அந்த
மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார்,
டாக்டரின் உடலை நல்லடக்கம் செய்யவிடாமல் தடுத்த சமூக விரோதிகள் மீது
நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு மனிதனுக்கும்
நல்லடக்கம் என்பது மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு
சட்டம் தந்துள்ள உரிமை. எனவே, டாக்டரின்  உடலை அடக்கம் செய்ய விடாமல்
தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்
கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
……………………….

You may also like...