மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா மற்றும் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜரான வழக்கில் தீர்ப்பு.*

*கோவில் நிதி முறைகேடு ஊழல் வழக்கில் அறநிலையத்துறை துறை ஊழியர்கள் 3 பேர் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்*

*மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா மற்றும் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜரான வழக்கில் தீர்ப்பு.*

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் இந்து சமய அறநிலையத் துறையின் அப்போதைய துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணியாற்றிய முதல் குற்றவாளி (A1), மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து, 2004 முதல் 2006 வரை கோவில் திருவிழா மற்றும் படித்தரம் செலவுகளுக்காக போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்து, ரூ.2,96,017 கோவில் நிதியை கையாடல் செய்ததாக, விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மொத்தம் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 5, 8 மற்றும் 12-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த HR&CE துறை ஊழியர்கள் தங்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, மனுதாரர்களுக்கு எதிராக எந்தவித வாய்மொழி அல்லது ஆவண ஆதாரமும் இல்லை என்றும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வாதிட்டார். வழக்கின் ஆவணங்களின்படியே முதல் குற்றவாளிதான் போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்துள்ளார். மனுதாரர்கள் யாரும் கோவில் நிதியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு இல்லை. அதிகபட்சமாக, 5-வது குற்றவாளி காசோலைகளை பணமாக மாற்றி முதல் குற்றவாளியிடம் ஒப்படைத்ததாகவும், மற்ற இருவரும் முதல் குற்றவாளியின் அறிவுறுத்தலின்படி ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும் மட்டுமே குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தவிர சதி, முறைகேடு அல்லது நிதி கையாடலில் அவர்கள் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும் என்று வாதிட்டார்.

இதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகையில் உள்ள ஆதாரங்கள் விசாரணையை தொடர போதுமானவை என்றும், அனைத்து தரப்பினரின் பங்கும் விசாரணையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களின்படி போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்களை முதல் குற்றவாளிதான் தயாரித்துள்ளார் என்றும், மனுதாரர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்செயலை நிரூபிக்கும் சுயாதீனமான வாய்மொழி அல்லது ஆவண ஆதாரம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார். ஆவணங்களில் கையெழுத்திட்டிருப்பது மட்டுமே அவர்களை குற்றவாளிகளாக கருத போதுமானதல்ல. அவர்களை தொடர்ந்து குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்துவது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாக அமையும் என்று கூறி, 5, 8 மற்றும் 12-வது குற்றவாளிகள் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்து, மற்ற குற்றவாளிகள் மீதான விசாரணையை சட்டப்படி தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com