ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நாகை மாவட்டம் மணக்காடு கிராமத்தை சேர்ந்த எஸ்.டி.ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வேதாரண்யத்திற்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடையில் ரயில் வழித்தடத்தில் நீர்நிலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா லெவல் கிராசிங்குக்கு பதிலாக சுரங்கப் பாதை அமைக்கப்படுவதால், அந்த கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென கோரிக்கை.வைத்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி நாகை மாவட்ட ஆட்சியரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் பாதையின் இருபுறமும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள இடம் அரசு புறம்போக்கு மற்றும் ரயில்வேக்கு சொந்தமானது என்றும், நீர் நிலை அல்ல என்றும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீர் நிலை என்பது சுரங்கப்பாதை உள்ள இடத்திலிருந்து தூரத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

ரயில்வே தரப்பு.வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜராகி தெற்கு ரயில்வே பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், சுரங்கப்பாதை அமைப்பதற்காக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கள ஆய்விற்கு பிறகே சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் தொடரப்பட்டுள்ள வழக்கு எனக் கூறி, மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்தனர். அபராதத்தை டிசம்பர் 15ம் தேதிக்குள் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக் குழுவிடம் செலுத்தவும் உத்தரவிட்டனர்.

You may also like...