சென்னை உயர்நீதிமன்றப் பெயர் மாற்றம்* *சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வைகோவுக்கு விளக்கம்*

*சென்னை உயர்நீதிமன்றப் பெயர் மாற்றம்*
*சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வைகோவுக்கு விளக்கம்*

நடுவண் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு ஜூன் 23 அன்று எழுதி இருக்கின்ற கடிதம்.

அன்புள்ள வைகோ,

கடந்த 2019 டிசம்பர் 4 ஆம் நாள், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், சுழிய நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என்றும், மாநில மொழியை அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் எனவும், தாங்கள் எழுப்பிய பிரச்சினையை நினைவு கூர்கின்றேன்.

2. பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் உயர்நீதிமன்றங்கள், 1862 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் நாள்,சட்டப்படி தோற்றுவிக்கப்பட்டன. விடுதலைக்குப் பிறகு, இந்த உயர்நீதிமன்றங்கள், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் 225 ஆவது பிரிவின்படி, தொடர்ந்து இயங்கி வருகின்றன.

3. மராட்டியம், தமிழ்நாடு,மேற்குவங்க அரசுகளின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்றங்கள் (பெயர் திருத்தம்) முன்வரைவு, 2016 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள், மக்கள் அவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் உயர்நீதிமன்றங்கள், மும்பை, கொல்கத்தா, சென்னை எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்ற வகையில், அந்த முன்வரைவு அறிமுகம் ஆனது.

4. தமிழ்நாடு சட்டமன்றத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றக்கோரி, தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக, 2016 ஆகஸ்ட் 1 ஆம் நாள், தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது.

2016 ஜூலை 16 ஆம் நாள், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கல்கத்தா உயர்நீதிமன்றப் பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்க முடியாது என முழுமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்து வேறுபாடுகள் எழுந்ததால், இதுகுறித்து மீண்டும் பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த வேளையில், மேலே கூறப்பட்ட சட்டமுன்வரைவு, 16 ஆவது மக்கள் அவையின் காலம் முடிவு பெற்றதால், செயல் இழந்து விட்டது.

இதற்கு இடையில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம்,2019 டிசம்பர் 19 ஆம் நாள் எழுதி இருக்கின்ற கடிதத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றம் குறித்த கருத்து, 2019 டிசம்பர் 7 ஆம் நாள் நடைபெற்ற, நீதிமன்றத்தில் முழுமையான அலுவல் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என்றும், பட்டயச் சட்டத்தின்படி தோற்றுவிக்கப்பட்ட நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றவது இல்லை என்ற கொள்கைப்படி, உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவது சரியாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது.

5. அண்மையில், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருக்கின்ற ஒரு வழக்கில், உயர்நீதிமன்றங்கள் அமைந்து இருக்கின்ற மாநிலங்களின் பெயர்களிலேயே உயர்நீதிமன்றங்களும் அமைவதில் நாடு முழுமையும் ஒரே நிலை இருக்க வேண்டும்..எனவே, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பெயர்கள் அந்தந்த மாநிலங்களின் பெயர்களிலேயே அமைவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது.

தற்போது, அந்த வழக்கு விசாரணையில் இருக்கின்றது.

6. உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து, கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து, அம்மாநில மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் எனக்கோரி, இந்திய அரசுக்குக் கோரிக்கைகள் வந்து இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1965 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, உயர்நீதிமன்றங்களில் இந்தி அல்லது மாநில மொழிகளை அலுவல் மொழியாக ஆக்குவது குறித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து கேட்கப்பட வேண்டும்.

நீதிமன்றம் முழுமையாகக் கலந்து பேசி, ஒருமனதாக மேற்கொண்ட தீர்மானத்தின்படி, மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது என, 2016 ஜனவரி 18 ஆம் நாள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கின்றார்.

இவ்வாறு, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
3107.2020

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com