கோயில் ஊழியர்களுக்கு ரூ.ஆயிரம் 6 வாரத்தில் வழங்க ஐகோர்ட் உத்தரவு * ‘தினமலர்’ ஆர்.ஆர்.கோபால்ஜி வழக்கில் தீர்ப்பு ===

*
கோயில் ஊழியர்களுக்கு ரூ.ஆயிரம்
6 வாரத்தில் வழங்க ஐகோர்ட் உத்தரவு
*
‘தினமலர்’ ஆர்.ஆர்.கோபால்ஜி வழக்கில் தீர்ப்பு
===
சென்னை: தினமலர் திருச்சி-வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனாவால் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்கு கோயில்களை மட்டுமே சார்ந்திருப்போர் பெரும் சிரமத்தில் உள்ளனர். கோயிலில் சேவையாற்றும் அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் போன்றவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், பிற ஊழியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று முறையிட்டுள்ளார்.
மேலும், ‘அறநிலையத்துறையில் ரூ.300 கோடி உபரி நிதி உள்ளது. கோயில் சேவைகளில் ஈடுபடுவோருக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில், அறநிலையத்துறையினருக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது’ என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா கொண்ட பெஞ்சில் 27.08.2020 மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில், ‘அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கோயில்களின் பூஜாரிகளுக்கு, கிராமக்கோவில் பூஜாரிகள் நல வாரியம் மூலம் கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட கோயில்களில் பணிபுரியும் 12 ஆயிரத்து 41 பேருக்கு மே, ஜூன் மாதங்களில் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. பெரிய கோயில்களைத் தவிர பிற கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் சம்பளம் பெறுவோருக்கு நிதியுதவி தேவையில்லை. மூடப்பட்டுள்ள கோயில்களின் ஊழியர்கள் 6 ஆயிரத்து 624 பேருக்கு ஜூலை மாத நிவாரணமாக தலா ரூ.ஆயிரம் வழங்க, ஆக.6ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால், வக்கீல் கவுசிக் ஆகியோர், “அறநிலையத்துறை தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் சரியல்ல. நிதியுதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். எனவே, அவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், “மூடப்பட்டுள்ள கோயில்களின் ஊழியர்கள் 6 ஆயிரத்து 624 பேருக்கு தலா ரூ.ஆயிரம் நிவாரணத் தொகையை ஆறு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். நிவாரணத்தொகை பெற தகுதியுடைவர்கள் அதிகமாக உள்ளனர் என்றால், அதற்குரிய ஆவணச் சான்றுகளுடன் மனுதாரர் புதிய வழக்கு தொடரலாம். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
/மீண்டும் வழக்கு/
ஆர்.ஆர்.கோபால்ஜி கூறுகையில், “கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை பற்றிய அறநிலையத்துறை தெரிவிக்கும் கணக்கு சரியல்ல. கோயில்களில் கூடுதல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையும் போதுமானது அல்ல. எனவே, நிச்சயமாக மீண்டும் வழக்கு தொடரப்படும்” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME