Madras high court orders feb 20

[4/19, 11:16] Sekarreporter: கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் 4ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது ஐந்து அதிமுக கவுன்சிலர்களை தவிர மற்றவர்கள், வாக்குச்சீட்டை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சுப்புராயலுவிடம் காண்பித்த பின் வாக்குப்பெட்டியில் போட்டதன் மூலம் தேர்தல் ரகசியத்தை மீறிவிட்டதாக கூறி, தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில், கவுன்சிலர்கள் தேர்தல் முடிந்ததும், 16 கவுன்சிலர்களையும் திமுகவின் சுப்புராயலு ஊட்டி அழைத்துச் சென்றதாகவும், பதவியேற்க அழைத்து வரப்பட்ட அவர்கள், தலைவர் தேர்தல் வரை பெரம்பலூரில் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தலைவர் தேர்தலின் போது தேர்தல் ரகசியத்தை அம்பலப்படுத்தியதால் தேர்தலை ரத்து செய்யக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, அரசியல் சட்டப்படி, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
[4/19, 11:22] Sekarreporter: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக 2005ம் ஆண்டு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள அவசர தேவைக்கான பிரிவின் கீழ் நில உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து நில உரிமையாளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி தண்டபாணி, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் அவசர தேவை திட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி வராது எனக் குறிப்பிட்டு, கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதுநாள் வரை நிலங்களை சுவாதீனம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், நிலத்துக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதிலிருந்து நிலம் அவரச தேவைக்காக கையகப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
[4/19, 12:48] Sekarreporter: நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்கிற்குள் நுழையவா என மாமல்லபுரம் பேருராட்சியிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவை பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக என தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி, குப்பை பிரிக்கும் பகுதி அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது என்றும்,
ஆனால் அதன்பின்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குப்பைக் கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி. நானே என்பவரை நீதிமன்ற ஆணையராக நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை
நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில், குப்பை கிடங்கு செயல்படவில்லை எனக் கூறி புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதேசமயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், விதிமீறல் தொடர்பாக மாமல்லபுரம் நகராட்சி செயல் அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற ஆணையர் அளித்த அறிக்கையில், 2008ம் ஆண்டு முதல் கிடங்கு செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரியை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், பேரூராட்சியில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்குக்குள் நுழையவா எனவும் கேள்வி எழுப்பி, அரசு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[4/19, 13:48] Sekarreporter: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கவில்லை என்றும், தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னிய மொழியான ஆங்கிலத்தை அனுமதிக்கும்போது நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது அரசியல்சட்டத்துக்கு விரோதமானது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வித்தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்கச் செய்துவிடும் என்பதால் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக, டில்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று கடைசி வாய்ப்பாக பதில்மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தங்களையும் இரு தரப்பாக இணைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
[4/19, 15:36] Sekarreporter: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஓ பன்னீர்செல்வம் அரசியல் ஆதாயத்திற்காக பல்டி அடித்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிலைபாடு என்ன என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 200 பக்க மனுவை அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி வழங்கினார். அதனை தொடர்ந்து, நீதிபதி ஆறுமுகசாமி முன்பு இன்று ஆஜராகிய நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராகும்படி நீதிபதி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா 72நாட்கள் சிகிச்சையில் இருந்த பொழுது, காவிரி தொடர்பான கூட்டம் 2மணி நேரம் நடைபெற்றது. அப்பொழுது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் பங்கேற்றாரா? அவரது நிலைபாடு என்ன என்பது குறித்து ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். இதே போன்று, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த விசாரணை ஆணையத்தை கோரிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அரசியல் ஆதாயத்திற்காக பல்டி அடித்துள்ளார் என விமர்சித்தார். இதே போன்று, ஆணையம் மீண்டும் யாரை வேண்டுமானாலும் 8B என்ற சட்ட விதி படி விசாரிக்க அதிகாரம் உள்ளது. இதே போன்று தமிழக அரசையும் இந்த ஆணையத்தின் விசாரணையில் சேர்க்க வேண்டும் எனவும் மனு வழங்கப்பட்டுள்ளது.

பேட்டி – புகழேந்தி, அதிமுக முன்ளாள் செய்தி தொடர்பாளர்
[4/19, 16:58] Sekarreporter: ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கால்வாய்க்குள்ளும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என தெரிவித்த தலைமை நீதிபதி, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனை பழையபடி மீட்டெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும் போது, நகரமும் அழகாகும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதை தொடர்ந்து பராமரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது எனவும். தமிழகத்தில் பாரம்பரியங்கள் உள்ளன எனவும் பெருமை தெரிவித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும், அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, விசாரணையை நீதிபதிகள், நாளைக்கு தள்ளிவைத்தனர்.
[4/19, 17:50] Sekarreporter: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் கிடக்கும் அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டதால், அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆலை வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் அபாயகரமான கழிவுகளால் அப்பகுதியில் மண் மாசடைந்து விட்டதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆலை நிர்வாகம் தரப்பில், செம்பு கழிவுகள் அபாயகரமானதா இல்லை என்பதை கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தீர்வு நடவடிக்கை என்ன என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், நான்கு வாரங்களில் இதுசம்பந்தமாக விளக்கமளிக்கவும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
[4/19, 18:32] Sekarreporter: சிறப்பு டிஜிபி-யால் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.-யை தடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப்பெறக் கோரி ஆண் எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி-யாக இருந்தவர் (ராஜேஷ் தாஸ்) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சிறப்பு டிஜிபியும் (ராஜேஷ் தாஸ்) மற்றும் பெண் எஸ்.பி. சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. (டி. கண்ணன்) ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட உட்புகார் விசாரணைக் குழு எனப்படும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். பாலியல் தொல்லை வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென தமிழக அரசிடம் கொடுத்த மனு மீது மடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. வழக்கு தொடர்ந்திருந்திருந்தார்.

அதேசமயம், உட்புகார் விசாரணை குழு விதிப்படி அமைக்கவில்லை என்பதால் அதை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சஸ்பெண்ட் சிறப்பு டிஜிபி மீதான புகாரை விசாரிக்கும் குழு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெறக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து 6 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

குழு அமைத்ததை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[4/19, 19:50] Sekarreporter: சென்னை மாநகராட்சி உள்ள 525 பூங்காக்கள் பகல் 11 மணியிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி வரை மூடப்படும் அவ்வாறு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மனுதாரரின் மனுவை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையர் முத்துராஜ் கோடைகாலத்தில் நடந்தும் டூவீலரில் செல்லக்கூடிய பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுப்பதற்கு சிரமப்படும் கோடைகாலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட525 பூங்காக்களை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மூடி விடுவதால் எப்போது திறக்க வேண்டும் எப்பொழுது மூட வேண்டும் உத்தரவு நகலை பணியாளர்களுக்கு தெரியப்படுத்த முதுநிலை பொறியாளர் பூங்கா துறை சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இதை மாநகராட்சி ஏற்றுக்கொண்டு காலை ஐந்து மணி முதல் இரவு 9 மணி வரை பூங்காக்கள் சென்னை நகரம் முழுவதும் திறந்திருக்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது தகவல் ஆணையர் முத்துராஜ் அவர்களின் உத்தரவை உடனடியாக மாநகராட்சி அமல்படுத்தி இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது இதற்கு தகவல் ஆணையர் முத்துராஜா அவர்களுக்கும் மாநகராட்சி நன்றியும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME