Madras high court november 18th orders

[11/19, 06:52] Sekarreporter1: சிறையில் சக கைதியால் தாக்கப்பட்டு மரணமடைந்த கைதியின் மனைவிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் 5 ம் தேதி ஏற்பட்ட மோதலில் சக கைதி விஜய் என்பவர் ரமேஷை கல்லால் தாக்கினார்.படுகாயமடைந்த ரமேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது,இதையடுத்து ரமேஷின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது

இது குறித்து கோவை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அளித்த கடிதத்தின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து
ஆணையத்தின் புலனாய்வு டிஜிபி யை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது

ஆணையத்தின் டிஜிபி அளித்த அறிக்கையை தொடர்ந்து நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில்,
உயிரிழந்த ரமேஷின் மனைவி தங்கம் காருண்யாவுக்கு ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்

சிறை கைதிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அதை செய்ய சிறைத்துறை தவறிவிட்டது என தெரிவித்துள்ள ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு சிறை வார்டன்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்துள்ளது
[11/19, 06:52] Sekarreporter1: பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வசந்தி என்பவர் பணம் சம்பாதிக்கும் ஆசையில் 15 வயதான சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். பல கட்டங்களில் பலர், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் தாயின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி, திருப்பதி சென்று அங்கு பழம் விற்கும் மூதாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளார். சிறுமி மீது சந்தேகம் கொண்ட ஆந்திரா போலீசார், அவரை மீட்டு சென்னை அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னை திரும்பிய சிறுமி, பலர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாய் வசந்தி உள்பட 10 பேருக்கு எதிராக விபச்சார தடுப்பு சட்டம், போக்ஸோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் தாய் வசந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேபோல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் இருவருக்கு தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மீதமுள்ளவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அடையாளம் காட்டியுள்ளார் என்பதால், குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, சிறுமியின் தாய் உள்ளிட்ட மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மற்ற 7 பேரில் இருவர் இறந்துவிட்டதால் மீதமுள்ள 7 பேருக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து நீதிபதி வேல் முருகன் தீர்ப்பளித்தார்.
[11/19, 06:52] Sekarreporter1: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் ஜாமீன் கோரிய திமுக எம்.பி. ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக எம்.பி. ரமேஷ், கடந்த அக்டோபர் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

விசாரணைக்குப் பின் கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கடலூர் கிளைச்சிறையில் அடைத்து எம்.பி.க்கு சலுகை காட்டப்பட்டுள்ளதாக பலியான கோவிந்தராசுவின் மகன் தரப்பில் குற்றம் சாட்டுவது தவறு எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் காவலுக்கு அழைத்து செல்லும் போது காயம் ஏற்பட்டதால் முதலுதவி அளித்து அழைத்து சென்றதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த பின் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா பதிவுகள் குறித்த தடயவியல் ஆய்வு அறிக்கைக்கு காத்திருப்பதாகவும், எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெறுவதாகவும், மாநில அரசே வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றியது எனவும் புலன் விசாரணை நியாயமாக நடக்கிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தரப்பில், விசாரணை அதிகாரி நியாயமாக விசாரிக்கவில்லை எமவும், பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் என்ற அடிபடையில் விசாரணை நடப்பதால், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கும் வகையில் சிபிசிஐடி யில் உள்ள வேறொரு அதிகாரியை பரிந்துரைக்க கோவிந்தராசு மகன் தரப்பிடம் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பினை நாளை வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்
[11/19, 06:52] Sekarreporter1: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கை இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கைகளும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதேபோல, கோவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக ரங்கராஜன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிந்து விட்டதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

மேலும், குழுக்கள் அமைக்கப்பட்டு, அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஏற்று வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
[11/19, 06:52] Sekarreporter1: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறையும் இந்து மதத்தின் வளர்ச்சிப் பணிகளை செய்யாமல் எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து கோவில்கள் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத்தை விழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரும் அனுமதிக்கப்படும்போது கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவம், காவல், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற உரிய ஏற்பாடுகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடனும் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என நவம்பர் 6ல் அளித்த மனுவை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள், 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார். மூன்று நாட்களுக்கு உள்ளூரை சேர்ந்த 3 ஆயிரம், வெளியூரை சேர்ந்த 7 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்களிலும் அனுமதிக்கப்படும்போது தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும் எனவும், 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் அரசு தரப்பில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், இன்றும் நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என தெரிவித்தார். ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் மாநில அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், அரசின் விளக்கத்தையும், கோவிலுக்குள் அனுமதிக்க முடியுமா என்பது குறித்தும் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று மதியம் 2:15 தள்ளிவைத்துள்ளார்.
[11/19, 06:52] Sekarreporter1: தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு விளக்கமளிக்க சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், மோளையனூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும், பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக இருந்த போது,
டெண்டர் ஒதுக்குவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் உதவியாளர் வேலாயுதம் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செல்வாக்கில் தான் பதவியில் இருந்து நீக்கபட்டதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் இருந்த அரசியல் மோதலுக்காக, தன்னை தற்கொலைக்கு முயற்சிக்கும்படி மூளை சலவை செய்ததாகவும், அதன்படி, தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தீக்குளிக்க முயன்று கைது செய்யபட்டு விடுவிக்கபட்டதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் லாபத்துக்காக தன்னை தற்கொலைக்கு தூண்டிய கே.பி.அன்பழகன் மீது, வழக்குப்பதிய கோரி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கபட்டதாகவும், அதனால் தான் அமைதியாகி விட்டதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கே.பி.அன்பழகன் மீது உரிய சாட்சி ஆவணங்களுடன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 22ம் தேதி தள்ளிவைத்தார்.
[11/19, 06:52] Sekarreporter1: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க முடியாது என்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத்தை விழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரும் அனுமதிக்கப்படும்போது கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள் என்றும், இரண்டு நாட்களில் 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள் என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார்.  கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இப்போதும் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

அரசின் நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய  அறிவுறுத்தி பிற்பகலுக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்க முடியும் என்றும், அவர்கள் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 18, 19, 20 தேதிகளில் கட்டளைதாரர்களுக்கு மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தீபத்திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்து பக்தர்களை அனுமதிப்பர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தீபத்திருவிழாவை இணைய தளத்திலோ அல்லது தொலைகாட்சிகளிலோ காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கட்டளைதாரர்கள், பக்தர்கள் என அனைவருமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பக்தர்கள் பின்பற்ற அறிவுறித்தி வழக்கை முடித்துவைத்தனர்.
[11/19, 06:52] Sekarreporter1: சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர்,தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர்
ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு இந்த மனுவை அனுப்பியுள்ளார்

அதில், நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர் சங்கம் மற்றும் அதன் தலைவராக இருந்து மறைந்த குரு ஆகியோரை குறிக்கும் வகையில் காட்சிகளும், கதாப்பாத்திரங்களும் அமைத்து அவதூறு பரப்பி உள்ளதாக அந்த நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய பெயர்களுடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் அந்தோனிசாமி பெயரை குருமூர்த்தி என மாற்றியதுடன், பின்னணியில் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அமைத்ததாக நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். படக்குழுவினரின் இந்த செயல் அறியாமல் நடந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

என்னதான் படம் தாழ்த்தப்பட்ட கணவன் மனைவி அனுபவித்த சித்ரவதைகளை காட்டும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும்,ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை கெடுக்கும் நோக்கில் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் எந்தவிதமான விருதுக்கோ பாராட்டுக்கோ தகுதியானது இல்லை எனவும் ஜெய் பீம் படத்தை தேசிய விருது உட்பட எந்த வித விருதுக்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ஏற்கனவே படக்குழுவிற்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது

You may also like...