தமிழகத்தில் பி.எம். ஸ்ரீ.(PM-SHRI) திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கோவை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பி.எம். ஸ்ரீ.(PM-SHRI) திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி கோவை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவரான அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசின் இரு மொழி கொள்கை காரணமாக மத்திய அரசின் கல்வித் திட்டங்களான நவோதயா பள்ளி, பி.எம்.ஸ்ரீ. கல்வித் திட்டம் போன்ற உயர் தர கல்வி திட்டங்கள் ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
பி.எம்.ஸ்ரீ. கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 12ஆம் வகுபபு வரையிலான மாணவர்களுக்கு, வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்தவக் காப்பீடும், வேலைவாய்ப்பு நீதியாக 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை மூலம் கிடைக்கவேண்டிய 2,100 கோடி ரூபாயும் கிடைக்கவில்லை என்பதால், பி.எம்.ஸ்ரீ. கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், நிவோதயா பள்ளியை துவங்க வலியுறுத்தியும் அல்லது மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் மே 31ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சபீக், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கோவை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.