பிரபல சினிமா இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வருமான வரி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல சினிமா இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வருமான வரி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குனராக உள்ள ஃபோட்டான் கதாஸ் தயாரிப்பு நிறுவனம், கடந்த 2013-14 ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் இயக்குனர்களாக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோருக்கு எதிராக வருமான வரித்துறை, கடந்த 2019 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2023 ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், கடந்த 2011 ம் ஆண்டே ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலகி விட்டார். அந்த தகவல் முறையாக கம்பெனிகள் பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், 2013-14 ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குறிப்பிட்ட நிதியாண்டுக்கு முன்பே இயக்குனர் பதவியில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் விலகி விட்ட நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என, அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், மற்றவர்களுக்கு எதிரான இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி, எழும்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com