PB Balaji judgeகாஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி கோவில் கட்டுமானத்தை மாற்றியமைக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது

காஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி கோவில் கட்டுமானத்தை மாற்றியமைக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சி ஸ்ரீதேவராஜ சுவாமி திருக் கோவிலில் டிசம்பர் 8 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் 27 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திருப்பணிகள் ஆகம விதிகளை பின்பற்றி நடைபெறவில்லை என கிருஷ்ண தேவராய என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் முன், மாநில மற்றும் மாவட்ட புராதன ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து கடந்த 2015 ம் ஆண்டு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவு பின்பற்றபடவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி B P. பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் செயல் அலுவலர் தரப்பில், உரிய அனுமதிகளை பெற்றே பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புராதன ஆணையத்தின் ஒப்புதல் பெறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஆதாரங்கள் மூலம் தெரிய வருவதால், கோவிலின் கட்டுமானத்தை மாற்றியமைக்கும் வகையில் எந்தவொரு பணிகளையும் அனுமதிக்க முடியாது எனக் கூறி, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் மனுவுக்கு நவம்பர் 21 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அறநிலைய துறை ஆணையர், கோவில் செயல் அலுவலருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 21 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com