நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு, நாட்டின் பாதுகாப்புக்காக மத்திய அரசு, முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற அசாதரண கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான எதிர்ப்புகளை ஏற்க முடியாது

ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஏழு பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவது என, 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு முடிவெடுத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஆவடியில் உள்ள, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம், தொழில் தகராறு சட்டப்படி பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை, 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதுசம்பந்தமாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, ஆவடியில் உள்ள, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு, நாட்டின் பாதுகாப்புக்காக மத்திய அரசு, முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற அசாதரண கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான எதிர்ப்புகளை ஏற்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஒரு வேளை போர் அறிவிக்கப்பட்டு, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களில் இருப்பில் இருந்த ஆயுதங்கள், வெடி மருந்துகள் தீர்ந்து, மேலும் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிக உற்பத்தி திறனுடன், சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்யவே, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற, நீண்ட விவாதங்களுக்கு பின், அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com