NGR_பிரசாத்* அவர்கள் வாதிட்டதை கருத்தில் கொண்டு, கடந்த 2024 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர், சட்ட கல்லூரி சென்னையில் கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில்

*வானிடிந்து_வீழினும்_வழங்குக_நீதியே*

சென்னையில் நான் படித்த *Dr_அம்பேத்கர்_அரசு_சட்ட_கல்லூரி* நீதிமன்றமாக மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வர இருப்பதால் *20_ஆண்டுகளுக்கு* பின்பு கல்லூரியைப் பார்த்துவிட எண்ணி நுழைந்த போது வளாகம் கல்லூரியாக இல்லை ஆனால் கல்லூரி நாட்களின் கரைந்து போகாத கனவுகள் நெஞ்சாக்கூட்டில் நினைவுகளாக படர்கிறது

*அடர்ந்த_மரங்களும்* *காய்ந்த_சிறகுகளும்* இல்லா நிலப்பரப்பு,

மாணவப்பருவத்தின் கனாக்கால கனவுகளை சுமந்த கற்கள் இருக்கைகள் (ஆங்காங்கே வீற்றிருந்த ஸ்டோன் பெஞ்ச்) காணாமல் போன கல்லூரி பூகோள நிலை,

பிரமாண்டாமான இரும்பு கதவு தாங்கிய முதன்மை நுழைவு வாயிலும், வாசலை அண்ணாந்து பார்க்கும் போது பார்வைக்கு தெரியும் Dr.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி பெயர் பலகை இல்லா வெற்றிடம்,

நீளமான மர மேசைகள், அகலமான வகுப்பறைகள், உயரமான சுவர்கள், கலைநயம் காட்டும் கண்ணாடி கதவுகள், நீண்ட நெடிய பாராங்கல் படிக்கட்டுகள், நுட்பமான கலை நுட்ப வேலைப்பாடுடன் கூடிய கட்டிட கூடார மேற்கூரைகள், இந்திய பாரசீக கலை வடிவம் கொண்ட கல்லூரி கட்டிடம்

*கபடியும்*- *கைப்பந்தும்* விளையாடிய விளையாட்டு மைதானம்,*டீ,சமோசா* சிகரெட் மற்றும் கலவை சிற்றுண்டி உணவு கொடுத்த கேன்டீன், சிலசமயம் நண்பர்களுக்கிடையில் புரிதல் இல்லாமல் கட்டி புரண்டு சண்டை போட்ட களங்கள், எல்லாவற்றையும் விட அறிவை செறிவாக கொடுத்த நூலகம், பல ஆண்டுகளுகளாக பயன்பாட்டில் இருந்து பயன்படுத்த முடியா நிலையில் ஓட்டை உடைச்சலோடு நின்றிருந்த கல்லூரி பேருந்து என மேற்சொன்ன அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டும் உருக்குலையா உறுதியுடன் செங்கட்டிடம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரியின் மைய மண்டபத்தில் போராட்டம் நடைபெற்றபோது அமர்ந்த பாராங்கள் படிக்கட்டுகள், கற்கும் மாணவர்களுக்கு வழி காட்டியாய் எப்பொதும் உயர்ந்து நின்று அறிவுரை சொல்லும் அம்பேத்கர் சிலை கொண்ட கல்லூரிக்கு வரலாறு *134_ஆண்டுகள்*

*(Fiat justitia ruat caelum- Let justice be done though the heaven fall)*

வானமே இடிந்து விழுந்தாலும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்கிற குறிக்கோளை இதயமாக கொண்டு இயங்கிய கல்லூரி *Dr_அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி.*

தமிழகத்தின் தலைநகரில் 134 ஆண்டுகளுக்கு முன்பு 1891-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ் சட்டக் கல்லூரி.

*1990_ம் ஆண்டு* அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு *Dr. அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி* என்று அன்றைய முதல்வராக இருந்த இன்றைய முதல்வரின் தந்தை கலைஞர் அவர்களால் பெயர் சூட்டப்பட்டு,

*1997_ம் ஆண்டு* தமிழக அரசு தனி சட்டம் இயற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த சட்டக் கல்லூரியை Dr. அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இயங்கிய கல்லூரி.

முன்னாள் குடியரசுத் தலைவர்
*R_வெங்கட்ராமன்* , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய சுப்பாராவ், சாதாசிவம், முதலமைச்சர் பக்தவச்சலம் மற்றும் ஏராளமான உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்பு அதிகாரிகளாக பணியாற்றுகிற பலரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தான்.

நான் *2004_ம்* ஆண்டு கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் இயங்கும் Dr.அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் சேர்க்கை நிறுத்தப்பட்டிருந்தது. அன்றைய *முதல்வர்_ஜெயலலிதா* அவர்கள் அரசு சட்ட கல்லூரிக்கு மாற்றாக *B.L(Hons* ) படிப்பை அறிமுகப் படுத்தி *தரமணியில் தரமான* சட்டப்படிப்பை கொடுக்கிறோம் என கொள்கை முடிவு எடுத்ததால் எவரும் சேர முடியாத சூழல், அந்த முடிவை எதிர்த்து *இந்திய_மாணவர்_சங்கம்*
( *SFI* ) எடுத்த தொடர் போராட்டத்தின் விளைவாய், மீண்டும் சேர்க்கை நடந்தது அதனடிப்படையில் நான் உள்ளிட்ட 80 மாணவர்கள் கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் இடம் கிடைக்கப் பெற்று சேர்ந்தோம். எங்களுக்கு முன்பு சேர்க்கை நிறுத்தப்பட்டிருந்ததால் எங்களுக்கு இமீடியேட் சீனியர்ஸ் எவரும் கிடையாது. *2004_ம்* ஆண்டுக்கு பிறகு நுழைவுத் தேர்வு முறை நிறுத்தப்பட்டது. ஒரு வேலை நுழைவுத்தேர்வு இல்லாமல் போயிருந்தால், 12 ம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அளவீட்டை மட்டும் கணக்கில் கொண்டு சேர்க்கை தகுதி நிர்ணயப்படுத்திருந்தல் என்னை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு வழக்கறிஞர் பணி வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

*DR_அம்பேத்கர் கல்லூரியில்* சேர்க்கை நிறுத்தப்பட்டதால், மாணவர்களுக்கு மற்ற மாவட்டங்களில் இயங்கிய அரசு சட்டக் கல்லூரிகளில் இடம் கொடுக்கப்பட்டது. நாங்கள் 80 மாணவர்கள் சேர்ந்ததற்கு பிறகு மற்ற கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் இங்கே வர வேண்டுமென மாறுதல் கொடுக்க வலியுறுத்தி மற்றுமொரு தொடர் போராட்டம் SFI நடத்தியதின் காரணியாக வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு இட மாறுதல் கொடுக்கப்பட்டது.

*Dr_அம்பேத்கர்* கல்லூரியில் இடம் கிடைக்க சேர்க்கை பணிப்போர் நடக்கும் என்பதை அனைவரும் அறிவர். கல்லூரி வளாகத்தை ஒட்டியே உயர் நீதிமன்றம் இருப்பதும், மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக இருக்கும் என்பதுவும் முக்கிய காரணம்.

தொழிற் சேர்க்கை கல்லூரி படிப்புகளுக்கு, உதாரணமாக மருத்துவ கல்லூரி படிப்பு எப்படி மருத்துவமனையுடன் இணைந்து இயங்குகிறதோ அப்படி சட்ட கல்லூரி இருப்பதும் அவசியம்.

*மகராஷ்டிரா* மாநில தலைநகரில் அமைந்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், மேற்குவங்க மாநில தலைநகர் கல்கத்தா உயர் நீதிமன்றம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர், தெலுங்கான மாநில தலைநகர் ஹைதரா பாத், மத்திய பிரதேச மாநில போபால், ராஜஸ்தான் மாநில ஜோத்பூர், கேரளா மாநிலம் எர்ணாகுளம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களை அருகாமையிலேயே சட்ட கல்லூரி இயங்குகிறது.
ஆனால் தமிழ் நாட்டின் தலை நகரில் ஒரு அரசு சட்ட கல்லூரி கூட இல்லை என்பது கல்வி வரலாற்றில் மட்டுமல்ல நீதி ஏற்பாட்டிலும் ஏற்பட்டுள்ள பெரும் பிழை.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் கிராமப்புற, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் முதல் தலைமுறையாக சட்டம் படிக்க வருகிற மாணவர்கள் சென்னையில் அரசு சட்டக் கல்லூரி இருக்குமானால் அதில் படிப்பதற்கும், படிப்பதற்கு இன்றியமையா தேவையான இருப்பிட வசதியை அரசு தங்கும் விடுதிகளில் கிடைப்பதற்கான ஏற்பாடு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வருகிற மாணவர்களின் படிப்புத் தேவைக்கான பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும் பகுதிநேர வேலைக்கான சூழல், சட்டம் படித்துக்கொண்டே அரசு பணிகளுக்கு தயாராகும் எண்ணம் கொண்ட மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு தயாராக ஏதுவாக போதுமான நூலக வசதி அதோடு மட்டுமல்ல படிக்கும்போதே ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக இணைந்து சட்டம் குறித்தும், வழக்கறிஞர் பணி மற்றும் நீதிமன்ற நடைமுறை பற்றி தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள அமைவதற்கான அனைத்து அம்சங்களும் இவையெல்லாம் சென்னை போன்ற மாநகரத்தில் மட்டுமே சாத்தியம்.

*சட்டப்பணி* என்பது சமூகத்தில் நிலவும் சூழல் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நிலையை அறிய, நீதிக்காக நீதிமன்றத்திற்கு அன்றாடம் வருகிற வழக்காடிகளின் பிரச்சினைகளை மாணவப்பருவத்திலேயே மனதுக்குள் உணரந்துகொள்ள நீதிமன்றத்திற்கு அருகாமையில் கல்லூரி இருப்பது சட்டக் கல்வியின் உண்மையான நோக்கத்தை அடைய வழிவகுக்கும்.

குறிப்பாக *சென்னை_உயர்_நீதிமன்ற வளாகம்* என்பது கீழமை நீதிமன்றங்களையும் அதனருகிலேயே கொண்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை, சாட்சி பதிவு, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது, வழக்கினை நடத்துகிற முறை என அனைத்து அனுபவங்களும் படிக்கும்போதே கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு கொடுக்கும் பயிற்சி மையமாகும். ஆனால் தற்போது எதிர்கால பணி செயல்முறையை கல்வி வாழ்க்கையோடு இணைந்து தெரிந்துகொள்ள முடியா சூழல்.

*சட்டப்படிப்பில்* ஆண் மாணவர்களுக்கு இணையான பெண் மாணவர்கள் வழக்கறிஞராக முன்னேறுவதில் நீதிமன்ற அருகிலேயே கல்லூரி இருக்கும்போது பெண் மாணவர்களுக்கு பெரும் நம்பிக்கை மற்றும் தைரியத்தை கொடுத்தது. தனக்கான மூத்த வழக்கறிஞர்களை தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல தன்னை ஒரு வழக்கறிஞராக தயார்படுத்தி கொள்ளும் தன்னம்பிக்கையை அளித்தது.

ஆனால் கடந்த 2018 ம் ஆண்டு முதல் *3 ஆண்டு சட்ட படிப்பு திருவள்ளூர் மாவட்ட பட்டறை பெரும்புதூரிலும்* , *5 ஆண்டு சட்ட படிப்பு செங்கல்பட்டு மாவட்ட பெரும்பாக்கத்திலும்* தொடர அனுமதித்து, சென்னை சட்ட கல்லூரி இடம் மாற்றப்பட்டது எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் *#NGR_பிரசாத்* அவர்கள் வாதிட்டதை கருத்தில் கொண்டு, கடந்த 2024 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர், சட்ட கல்லூரி சென்னையில் கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில் இதுநாள் வரை தலைநகரில் நீதிக்கான விதையை நெஞ்சில் விதைக்கும் சட்ட கல்வி கொடுக்கும் கல்லூரி நிறுவ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், இருந்த கல்லூரியும் உயர் நீதிமன்ற குற்றவியல் நீதிமன்றங்களாக செயல்பட ஆரம்பிக்கிறது….

எது எப்படியோ வானமே இடிந்தாலும் நீதி நிலை நாட்டப்பட வேண்டுமென்ற நோக்கம் நொடிந்து போகாமல் தொடரட்டும்…

*-இரா.திருமூர்த்தி*
(வழக்கறிஞர்)
*சென்னை உயர்நீதிமன்றம்*

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com