பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதியில் எந்த வித கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது

பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதியில் எந்த வித கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம், 1400க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.

இதற்காக,பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் சாலை அமைக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில், டன் கணக்கில் கட்டுமான பொருட்கள், மண் கொட்டப்படுகின்றன.

இதனால் சென்னையின் பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலம் அழிக்கப்பட்டு வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் பிரசாந்த் கர்கவா அமர்வு, ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல காரணங்களால் சென்னையின் சதுப்பு நிலம் பகுதிகள் மிகவும் சுருக்கிவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் சதுப்பு நில பகுதிகளை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் தெரிவித்தது.

மேலும், ராம்சர் சதுப்பு நில கணக்கெடுப்பு மற்றும் ராம்சர் தளத்தை பராமரிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நீர்வளத்துறை, மாநில சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து, சதுப்பு நிலங்களை கண்டறிந்து பாதுகாப்பது தொடர்பாக ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் இறுதி செய்யப்படும் வரை, தமிழக மாநில சதுப்பு நில ஆணையம், சென்னையின் கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்பு நிலத்தின் இப்பகுதியை அறிவியல் ரீதியாக தீர்மானிக்கும் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது.

தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்குவதைக் கருத்தில் கொள்ளும்போது, ராம்சர் பகுதிகளை பராமரிக்கும் வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com