நீலகிரி மாவட்ட கருவூல அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கருவூல அதிகாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கருவூலத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய சரவணன் என்பவர், உதகமண்டலத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தனது வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார்.
இதற்கு தொழிலாளர் நல நீதிமன்ற உதவியாளர் ரஞ்சித்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த சரவணன், ரஞ்சித்குமாரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
தொழிலாளர் நல நீதிமன்ற உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கருவூல அதிகாரி சரவணனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.
அப்போது, நீலகிரி மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் பில்களை சமர்ப்பித்து பணம் பெற்றது தொடர்பாக உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளரிடம் புகார் அளித்ததால், முன் விரோதம் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருவூல அதிகாரி சரவணன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கருவூல அதிகாரிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.