நீதிமன்றமானது எந்தவொரு அரசியல் சண்டைகளுக்குமான இடமல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த அபராதத் தொகையினை தமிழ்நாடு அரசுக்கு செலுத்தவும், தமிழ்நாடு அரசானது அந்த தொகையினை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் விளம்பரங்களில் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் படங்களை பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் அதிமுக-வின் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்,
மக்கள் நலத்திட்டங்களில் எந்தவொரு தனி நபரின் பெயரையும் விளம்பரங்களுக்காகவோ அல்லது திட்டப் பிரச்சாரங்களுக்காகவோ பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமானது 31.07.2025 அன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிம்னறத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மாண்பமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.B.R.கவாய், மாண்பமை நீதிபதி திரு.K.வினோத் சந்திரன், மாண்பமை நீதிபதி திரு.NV.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வானது, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவினை ரத்து செய்ததோடு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ரிட் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
மேலும், மனுதாரர் சார்ந்துள்ள கட்சியானது அவர்களுடைய தலைவியான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் அரசியல் அடைமொழியான “அம்மா” எனும் பெயரில் 25 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திய போது எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றும், அந்த வகையில் தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கானது குறிப்பிட்ட இலக்கு கொண்டும் அரசியல் நோக்கோடும் தொடரப்பட்டுள்ளதாக தோன்றுவதாகவும்,
அதுமட்டுமின்றி, மனுதாரர் ஒரு பொய்யான வாதத்தை முன்வைத்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போல கூறியுள்ளார் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
நீதிமன்றமானது எந்தவொரு அரசியல் சண்டைகளுக்குமான இடமல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த அபராதத் தொகையினை தமிழ்நாடு அரசுக்கு செலுத்தவும், தமிழ்நாடு அரசானது அந்த தொகையினை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்
என்றும் உத்தரவிட்டனர்.