நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன். கடன் தொகை செலுத்தாமல், நேர்மையற்ற முறையில் செயல்பட்டிருப்பதாக தெரிவித்து, கடன் தொகை 21கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி நாளை மறுநாள் வெளியாக இருந்த வா வாத்தியார் திரைப்படத்தை திரையரங்கள், ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2019 ம் ஆண்டு தொழில் அதிபர் அர்ஜூன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் 10கோடியே 35 லட்ச ரூபாயை கடனாக பெற்றிருந்தார்.
இந்நிலையில் அர்ஜூன் லால் சுந்தர் தாஸ் திவாலானவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு பின்னர் அவர் இறந்ததால் அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சென்னை உயர் நீதிமன்றம் சொத்தாட்சியரை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக அர்ஜூன் லால் சுந்தர் தாஸிடம், கடன் பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த சொத்தாட்சியரிடம் கடன் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெற்ற கடன் தொகை 10.35 கோடி ரூபாய் 18 % வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 21கோடியே 78 லட்சத்து 50 லட்ச ரூபாய் தற்போது செலுத்த வேண்டி உள்ளது.
இந்நிலையில் இந்த கடன் தொகையை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி டிசம்பர் 12 ம் தேதி வெளியாக உள்ள வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஞானவேல் ராஜா தரப்பில், வா வாத்தியார் படத்தை வெளியிட வில்லை என்றால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் 24 மணி நேரத்திற்குள் 3.75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த தயாராக இருப்பதாகவும், மீத தொகையை செலுத்தும் வரை கோத்தகிரி உள்ள தன் நண்பனுடைய 6 ஏக்கர் நிலம் தொடர்பான சொத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில், இது ஞானவேல் ராஜா கடன் தொகையை செலுத்தாமல் 7 படங்களை வெளியிட வெளியிட நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.
ஆனாலும் இது வரை கடன் தொகையை முழுமையாக செலுத்தவில்லை என்பதால் வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என வாதம் வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஞானவேல் ராஜா, நீதிமன்ற உத்தரவின் படி கடன் தொகை செலுத்தாமல், நேர்மையற்ற முறையில் செயல்பட்டிருப்பதாக தெரிவித்து, கடன் தொகை 21கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.
வா வாத்தியார் திரைப்படத்தை திரையரங்குகள், ஒடிடி தளங்கள் என எந்த வடிவிலும் வெளியிட அனுமதியில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.