நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, கருணாஸை காணொலி காட்சி
புதுச்சேரியில், ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கருணாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம், ஆஜர்படுத்தப்பட்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விவேகானந்தன், சிறை கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருணாஸுக்கு எதிரான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு தூக்கு தண்டனை விதித்து, கடந்த மே 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, கருணாஸை காணொலி காட்சி
மூலம் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இன்று காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸிடம், சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரே வழக்கு நடத்தலாமா? வேறு வழக்கறிஞர் நியமிக்கப் போகிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், வழக்கறிஞர் நியமனம் குறித்து கருணாஸின் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவெடுக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.