நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நில அபகரிப்பு, முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில், பிரதான குழாயில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்ததாக கூறி, அவரது வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மக்களுக்காக சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் வந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள், நில அபகரிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவர்கள் மீது  எந்த கருணையும் காட்டாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதி, இரு தரப்பினரின் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

You may also like...