கப்பல் துறை கட்டணம் செலுத்துவதில் முறைகேடு செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சை உபகரணங்கள் இறக்குமதி செய்தபோது, கப்பல் துறை கட்டணம் செலுத்துவதில் முறைகேடு செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெல்ஜியத்தைச் சேர்ந்த அயான் பீம் அப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.191.08 கோடிக்கு புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைல்கான புரோட்டியஸ் 235 புரோட்டான் என்ற மருத்துவ உபகரணம் மற்றும் துணைக்கருவிகளை சென்னையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் இறக்குமதி செய்தது. சென்னை துறைமுகத்தில் சுங்க வரி செலுத்தி சிகிச்சை இயந்திரத்தை வெளியில் எடுத்துவரும் பணியை என்.எஸ்.கே. என்ற நிறுவனம் மேற்கொண்டது. பொருளை பெறுவதற்கான நுழைவுப்பத்திரம் தாக்கல் செய்த பிறகு, துறைமுக மேடையை பயன்படுத்தியதற்காக கப்பல் துறை கட்டணம் (Wharfage Charges) ரூ.59,23,610/ வசூலிக்கப்பட்டது.
பின்னர் இறக்குமதி சாதனத்தின் விலை மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.21,85,082/- வரையிலான கப்பல்துறை கட்டணத்தை என்.எஸ்.கே. நிறுவனம் திரும்பப் பெற்றது.
2017 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் என்.எஸ்.கே நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை, மதிப்பீட்டாளருடன் கூட்டுச் சதி செய்து, போலி விலைப்பட்டியலைத் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக சுங்க வரித் துறை அதிகாரிகள் இருவர், என்.எஸ்.கே. நிறுவனம் மற்றும் அதன் மேலாளர் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
அந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி சுங்கவரித் துறை அதிகாரி ரோகிதஷ் செராவத் மற்றும் என்.எஸ்.கே. நிறுவனத்தின் மேலாளர் என்.லட்சிமணன் ரெட்டி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜரத்தினம், வழக்கறிஞர்கள் எஸ்.அருணாச்சலம், சதீஷ் சுந்தர் ஆகியோரும், சிபிஐ தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே. சீனிவாசன் ஆகியோரும் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, அதிகப்படியாக செலுத்தப்பட்ட கப்பல்துறை கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர் எந்த ஆவணங்களையும் போலியாகத் தயாரித்தார் என்பதைக் காட்டுவதற்கு முற்றிலும் எந்த ஆதாரமும் இல்லை; அதிகப்படியான கப்பல்துறை கட்டணங்களைத் திரும்ப தரக் கோரி விலைப்பட்டியல் படிவத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக வழக்கை தொடர முடியாது; கொள்கலன்களின் எண்ணிக்கையில் அதிகமாக செலுத்தப்பட்ட தொகையே திரும்பப்பெறப்பட்டுள்ளது; கொள்கலன்களின் எண்ணிக்கையில் அதிகமாக செலுத்தப்பட்ட தொகையே திரும்பப்பெறப்பட்டுள்ளது; இறக்குமதியாளருக்குச் செலுத்தப்பட்ட தொகை தற்போது திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டதால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்த வழக்கு என்பது சட்ட நடைமுறையின் அதிகார துஷ்பிரயோகம் என்பதால், சிபிஐ நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.