ஆயிரம் புத்தகங்களுக்கும் மேல் உள்ள என் புத்தக அலமாரியைத் தலைப்புவாரியாக ஒழுங்குபடுத்தினேன். புத்தகங்களை முறையாக அடுக்கிவைக்காததால் ஒரு சில புத்தகங்களை இரண்டு, மூன்று முறை வாங்கிவைத்திருப்பதை நினைத்துச் சிரிப்பு வந்தது. Advt Arul Moli
– அருள்மொழி, வழக்கறிஞர்
ஊரடங்கு அறிவிக்கப்படு வதற்கு முன்புவரை கருத்தரங்கு, மாநாடு போன்றவற்றுக்காகத் தொடர்ச்சியாகப் பல ஊர்களுக்குப் பயணித்துக்கொண்டிருந்தேன். ஊரடங்கு அறிவித்த முதல் ஒரு வாரம் கொஞ்சம் ஓய்வெடுத்தேன். அதன்பிறகு திருவாரூரைச் சேர்ந்த ‘பெரியார் – அம்பேத்கர் – கார்ல் மார்க்ஸ்’ வாசகர் வட்டம் சார்பில் இணைய வழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறகு, திராவிடர் கழகத்தின் சார்பாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அன்னை நாகம்மையார் ஆகியோர் குறித்து இணையவழிக் கருத்தரங்குகளில் பேசினேன்.
மாவட்டவாரியாக இணையவழிக் கருத்தரங்குகள் நடைபெற்றதால் தோழர்கள் பலரைத் தொழில்நுட்ப உதவியுடன் சந்திக்க முடிந்தது. குறிப்பாக, முற்போக்குச் சிந்தனை கொண்ட இளம் தோழர்கள் இந்த இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். அதேபோல் இந்த ஊரடங்குக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுடைய பிரச்சினை, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை ஆகியவை குறித்தும் இணையத்தில் விவாதித்தேன்.
இதுபோன்ற சமூகம் சார்ந்த விஷயங்களைச் செய்தாலும், நான் நீண்ட நாட்களாகச் செய்ய நினைத்த வீட்டு வேலைகளை இந்த ஊரடங்கு காலத்தில் செய்ய முடிந்தது. குறிப்பாக, என் அலுவலகத்தையும் வீட்டையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகத் திட்டமிட்டுவந்தேன். அந்தப் பணிகளை இந்த ஊரடங்கின்போது செய்ய முடிந்தது.
வீட்டை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நான் கலந்துகொண்ட கருத்தரங்கு, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்காக அந்தந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் குறிப்பெடுத்து வைத்திருந்த குறிப்பேடுகள், தாள்கள் போன்றவை கிடைத்தன. ஒரு பெரிய தொலைக்காட்சியை வைக்கும் அட்டைப்பெட்டி அளவுக்கு அவை இருந்தன. அவற்றைப் பார்த்தபோது, ஒரு காலத்தில் முக்கிய விஷயங்களைக் குறிப்பெடுக்க உதவிய தாள்கள் எல்லாம் காலம் மாறமாற குப்பையாகிவிட்டனவே என்று நினைத்தேன்.
வாழ்க்கையில் நாம் பெரிய பிரச்சினை என நினைக்கும் விஷயங்கள்கூடக் கால மாற்றத்தால் அர்த்தமற்றவையாகிவிடும் என்பதை அந்தத் தாள்கள் எனக்கு உணர்த்தின.
ஆயிரம் புத்தகங்களுக்கும் மேல் உள்ள என் புத்தக அலமாரியைத் தலைப்புவாரியாக ஒழுங்குபடுத்தினேன். புத்தகங்களை முறையாக அடுக்கிவைக்காததால் ஒரு சில புத்தகங்களை இரண்டு, மூன்று முறை வாங்கிவைத்திருப்பதை நினைத்துச் சிரிப்பு வந்தது. படிக்க வேண்டும் என நினைத்திருந்த புத்தகங்களை இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.
மேலும் மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களைப் பார்த்தேன். என்னதான் மற்ற மொழிப் படங்களைப் பார்த்தாலும் தமிழ்ப் படங்களையும் பார்க்க வேண்டுமல்லவா? எனக்கு ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் ரொம்பப் பிடிக்கும். அதனால், மீண்டும் ஒரு முறை அந்தப் படத்தைப் பார்த்தேன்.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்த வேண்டும் என நினைத்தேன். ஆனால், அது மட்டும் முடியவில்லை.
சென்னை உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டுவிட்டால் செய்ய வேண்டிய வேலைகளையும் திட்டமிட்டு வருகிறேன்.