Temple property case

கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுள் சொத்துகளின் மூலமாக இருக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியில் மெர்மெய்ட் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனம் கட்டிய குடியிருப்பில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையை அணுகக்கூடிய இடத்தில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 9600 சதுர அடி தரிசு நிலத்தை குத்தகைக்கு பெற்று, குடியிருப்பின் பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

குத்தகை முடிவடைந்த நிலையில் அதை நீட்டிக்க கோவில் செயல் அலுவலர் ஆட்சேபம் தெரிவித்ததால், 400 சதுர அடியை மட்டுமே தரத் தயாராக இருப்பதாகவும், அதையும் குத்தகை அடிப்படையில் இல்லாமல் 7000 ரூபாய் என்ற மாதாந்திர வாடகை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என 2017ஆம் ஆண்டு அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மெர்மெய்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நிலத்தை கோவில் நிர்வாகம் பயன்படுத்தாமல் இருப்பதால், எதிர்காலத்தில் பயன்படுத்தமாட்டார்கள் என முடிவெடுக்க முடியாது என்பதால், பாதைக்கு தேவைப்படும் நிலத்தை குத்தகை அடிப்படையில் வழங்கும்படி அறநிலையத்துறை மூலமாக மனுதாரர் நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என உத்தரவிட்டார். அதுவரை அறநிலையத்துறை உத்தரவை அமல்படுத்த அவசியம் இல்லை எனவும் அறிவுறித்தியுள்ளார்.

அதுகுறித்து, அனைத்து தரப்பும் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து, பரிசீலித்து உரிய முடிவெடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி முக்கியாமனதாக இருந்தால் கூட அது கடவுள் சொத்துகளின் மூலமாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளார்.

You may also like...