Madras high court sept 25 th orders

[9/24, 11:48] Sekarreporter.: உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர்,
திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி,
திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

செப்டம்பர் 15 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும் அக்டோபர் 12 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அக்டோபர் 16 ம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,
மாநிலம் முழுவதும் அல்லாமல் 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த காரணமும் இல்லை எனவும்,சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில் ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால்
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும்,கொரோனா விதிகளை அமல்படுத்த வலியுறுத்தியும் அதிமுக வின் இணை ஒருஙகிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14 ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

அந்த மனுவில்,உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவை தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 2006 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்,தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதால்,
எதிர்கட்சி தலைவரின் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும்,
தேர்தல் நியாயமாகவும்,
நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, வெளி மாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும், மத்திய காவல் படையை பணியமர்த்த வேண்டும், தேர்தலை முழுமையாக சிசிடிவி பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாநில தேர்தல் ஆணையத்திடம் செப்டம்பர் 14ல் மனு அளித்தும் பதிலளிக்கவில்லை என வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, 14900 வாக்குச்சாவடிகளுக்கும் போது பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நியாமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது அவசியம் என கருத்து தெரிவித்தனர். மேலும் மாநிலத்தில் பிரதான கட்சி என்ற முறையில் அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரருக்கு செப்டம்பர் 29க்குள் தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[9/24, 13:16] Sekarreporter.: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், 2019 ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் பொதுசின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.கே.அய்யர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, முந்தைய மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் பொது சின்னம் ஒதுக்கப்படததால் உள்ளாட்சி தேர்தலில் பொதுசின்னம் ஒதுக்க கூடாது என உள்ளாட்சி தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு விதிகளில் கூறப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை மனுவை நிராகரித்த உத்தரவை மறுபரிசீலனை செய்து உரிய முடிவை வரும் திங்கட்கிழமை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
[9/24, 13:54] Sekarreporter.: தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன், அவற்றின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இனிமேல் தமிழகத்தில் தனியார் எவரும் யானையை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள், அரசுக்கு உத்தரவிட்டனர்.
[9/24, 16:40] Sekarreporter.: நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நில அபகரிப்பு, முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில், பிரதான குழாயில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்ததாக கூறி, அவரது வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மக்களுக்காக சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நில அபகரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் வந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள், நில அபகரிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவர்கள் மீது  எந்த கருணையும் காட்டாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதி, இரு தரப்பினரின் புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
[9/24, 16:41] Sekarreporter.: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது…

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக ஆனந்த் என்பவர்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற  செய்த செலவு தொகையை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு 3 மாதங்களில்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது..

இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நோயாளிகளுக்கும்,சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சை கட்டணத்தை அரசு  இன்னும் முழுமையாக திரும்ப அளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டணத்தை திரும்பி செலுத்தியது குறித்து  அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

சிகிச்சைக்கான கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் தருவதாக அரசு உறுதி அளித்தும் இன்னும் வழங்கமால் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  செப்டம்பர் 30 ம் தேதிக்குள் சிகிச்சை கட்டணத்தை திரும்ப அளிக்காவிட்டால் ஊதிய பிடித்தம் உள்ளிட்ட  கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளரை எச்சரித்து விசாரணையை தள்ளிவைத்தனர்…
[9/24, 16:48] Sekarreporter.: பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கபடவில்லை என்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் மட்டுமே உணவு வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.

அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாவதாக குறிப்பிட்ட  நீதிபதிகள்,பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என அரசுக்கு  உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்…

You may also like...