Court direct Senthil balaji to appear
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகி தான் ஆக வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி கடந்த 2011 – 2015 ம் ஆண்டு காலகட்டத்தில் அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
இவ்வாறு கிடைத்த பணத்தின் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக கூறி செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
பின்னர் இந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றி செல்வன், அருண் ரவீந்திரா டேனியல், ஆல்பட் தினகரன், ஜெயராஜ் குமார், பழனி,லோகநாதன்,பிரபு,அனுராத ரமேஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு ஜூன் 14 ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.
அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அவரின் சகோதரர் அசோக், உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர்.
அப்போது உச்சநீதிமன்றம் தனக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதை படித்து பார்த்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அது பொருந்தாது என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி தான் ஆக வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கில் முதல் 5 பேரிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதாக குறிப்பிட்ட நீதிபதி, மீதமுள்ளவர்களிடம் சாட்சி விசாரணை நடத்துவதற்காக வழக்கின் விசாரணையை ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்