மீரா மிதுனை கைது செய்து, வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு judge karthikeyan sessions court chennai

பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், ‘வீடியோ’ வெளியிட்டார் மீரா மிதுன்,34. இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன.
அதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர்.
பின், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், சாட்சி விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார்; மீரா மிதுன் ஆஜராகவில்லை.
இதையடுத்து, ஆக., 6ல் மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தனிப்படையும் அமைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமறைவாக இருந்து வந்த மீரா மிதுனை, தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றம் பிறப்பித்த ‘பிடி வாரன்ட்’ உத்தரவை செயல்படுத்த முடியாமல் இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த விசாரணையின் போது, மீரா மிதுனின் தாயார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,’ டில்லி தெருக்களில், தன் மகள் சுற்றி வருவதாகவும், அவரை மீட்க வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி,” இந்த நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக, டில்லியில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் தலைமறைவான மீரா மிதுன் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், டில்லி போலீசார் உதவியுடன் அவரை கண்டறிந்து, பிடித்து உள்ளனர். தற்போது அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளார் என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் விசாரணை அதிகாரி, மீரா மிதுனை கைது செய்து, வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில், ‘வாரன்ட்’ உத்தரவை நிறைவேற்றாத தனிப்படை போலீசாரின் நடவடிக்கைக்கு, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com