30 days jail bill R C Paul.kanagaraj. special interview
தவறு செய்தால் உடனடியாக தண்டிக்கப்படுவோம் என அரசியல்வாதிகள் உணரும் வகையிலேயே, 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பதவியை பறிக்கும் மசோதா மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு உள்ளதாக பிஜேபி மாநில துணைத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ஆர். சி. பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் குற்ற வழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பதவியை பறிக்கும் வகையிலான புதிய மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த சட்டத்திருத்த மசோதா குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ஆர். சி. பால் கனகராஜ் அவர்களிடம் நமது செய்தியாளர் முகேஷ் எடுத்த பேட்டி :-
நிருபர் : மக்கள் பிரதிநிதிகளை தண்டிக்கப்பட்டால் தகுதியிழப்பு செய்ய ஏற்கனவே சட்டங்கள் உள்ளபோது புதிதாக ஒரு மசோதா அவசியமாற்றது என குற்றம்சாட்டப்படுகிறதே?
ஆர். சி. பால் கனகராஜ் : அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதான ஊழலை வெளிக்கொண்டுவந்து, விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ள லோக் பால், லோக் ஆயுக்தா சட்டம் ஏற்கனவே இருக்கும் நிலையில், அதைவிட கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் தான் திருத்தமாக கொண்டுவருக்கிறார்களே தவிர புதிதாக ஒரு சட்டம் இல்லை. லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் இல்லாத காலக்கெடு இந்த புதிய சட்டத்திற்கான மசோதாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பான ஒன்று.
நிருபர். : மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பால் கனகராஜ் : மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடைமுறை உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனும் இந்த சட்டத்தை வரவேற்க வேண்டும்.
நிருபர். : இதன் நோக்கம்தான் என்ன?
பால் கனகராஜ் : பொதுமக்கள், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் என எவர் செய்தாலும் தவறு தவறுதான் என்கிற நிலையில், சாதாரண பாமர மனிதன் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் ஒரே சட்டம் தான் என்பதை தெளிவுபடுத்துவதே இதன் நோக்கம்.
நிருபர். : மத்திய அரசு சொல்லவரும் தகவல் என்னவாக உள்ளது?
பால் கனகராஜ் : பொதுமக்கள் தவறு செய்தால், என்ன தண்டனை, எந்த வேகத்தில் கிடைக்குமோ, அதே தண்டனை அதே வேகக்கில் நமக்கு கிடைக்கும் என்ற பயத்தில், அரசியல்வாதிகள் ஊழலற்ற ஒர் ஆட்சியை தருவார்கள். அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும், தவறு செய்யாவிட்டால் அவர்கள் ஏன் பயப்பட வேண்டும்; தவறு செய்யாமல் இருப்பேன் என்று சொல்வதை விட்டுவிட்டு, தவறு செய்தாலும் தன்னை தண்டிக்கக்கூடாது என்பதில் நியாயமே இல்லை.
நிருபர். : விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக மட்டுமல்லாமல், பொதுவான கருத்தாகவும் நிலவுகிறதே?
பால் கனகராஜ் : முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இதை பொதுவான, சமமான சட்டமாக பாவிக்கவேண்டும். முறையான ஆவனங்களை சேகரித்த பிறகான விசாரணையின் முடிவில்தான் ஒருவர் கைது செய்யப்படும் நிலையில், ஜாமீன் கிடைக்காதபோது தான், 31வது நாள் தானாகவே பதவி இழப்பார். தவறுக்கு ஏற்றவாறு உடனடியாக தண்டிக்கப்படுவோம் என அரசியல்வாதிகள் உணர வேண்டும்; அந்த அச்ச உணர்வு தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நோக்கிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியா குடிமகனும் சட்டதிற்கு முன் சமமானவர்கள் என்பதையும், அதிகாரத்தில் இருந்தாலும் தவறு செய்தால் உடனடியாக அங்கீகாரம் பறிக்கப்படும் என்பதையும், இந்த சட்டம் உணர்த்துகிறது.
நிருபர். : பாஜக-வினர் மீதே வழக்குகள் உள்ள நிலையில் இந்த சட்டத்தால் சொல்ல நினைப்பது என்ன?
பால் கனகராஜ் : அப்படிப்பட்ட சூழலிலும் இந்த சட்டத்தை கொண்டுவருபவர் தான் சிறந்த ஜனநாயகவாதி, அதுமட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியும் கூட. தன் கட்சிக்காரர்கள் மீதும் வழக்குகள் இருப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், “நாளைய இந்தியா நல்ல இந்தியாவாக மலர வேண்டும்” என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
============