ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் அமைச்சரவை முடிவின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அதிமுக அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.

நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ரவிச்சந்திரனும், முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இந்திய அரசியல் சாசனம் 161வது பிரிவின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அமைச்சரவை பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் எனவும், அந்த பரிந்துரை மீது 42 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தான் நளினி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இதுவரை எண்ணிடப்படாமல் இருந்த இந்த மனுவுக்கு எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

முன் கூட்டி விடுதலை கோரி இதே வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தரப்பில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டஆயுள் கைதிகள் விடுதலை செய்துள்ளதை போல 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது.

ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

You may also like...