நீதிபதி எஸ்.கார்த்திகேயன்
 நீதிமன்றத்தில் பெண்களை படம் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 70 வயது முதியவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சுதிர் ராம்சந்த பல்சந்தானி (70). இவர் தனது வழக்கு தொடர்பாக கடந்த 3ம் தேதி சென்னை 10 உரிமையியல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, நீதிமன்றத்தில் இருந்த பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என சிலரை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தரப்பட்ட புகாரின் அடிப்படையில் சுதிர் ராம்சந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது செல்போன் தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சுதிர் ராம்சந்த பல்சந்தானி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், எஸ்.இம்மானுவேல் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் வாதிடும்போது, மனுதாரர் வயதானவர். அவர் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் வயதையும் புகார்தாரர்களுக்கு அவரால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதையும் கருத்தில்கொண்டு அவருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் அடுத்த உத்தரவு வரும்வரை தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
