நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:–தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களாக பட்டதாரிகளை தேர்வு செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Hindu Tamil
முகப்பு
தமிழகம்
செய்திப்பிரிவு
செய்திப்பிரிவு

Published : 05 Oct 2020 07:05 AM
Last Updated : 05 Oct 2020 07:06 AM
தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களாக பட்டதாரிகளை தேர்வு செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
madurai-high-court
மதுரை
என்எம்ஆர் (தற்காலிக ஒப்பந்த)தொழிலாளர்களாக பட்டதாரிகளைத் தேர்வு செய்யக்கூடாது, பிளஸ் 2 படிப்பை அதிகபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாண்டிராஜா, நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் ஜெ.நாகூர்மைதீன், பி.செந்தில்குமார், எம்.ஈஸ்வரி, எம்.பாண்டிபிரியா உட்பட 20 பேர்உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நாங்கள் பொதுப்பணித் துறையில் 7 ஆண்டுகளாக தற்காலிக ஒப்பந்தத் (என்எம்ஆர் – நாமினல் மஸ்டர் ரோல்) தொழிலாளர்களாகப் பணிபுரிகிறோம். இத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்நிர்ணயம் செய்ய உயர் நீதிமன்றம்2019-ல் உத்தரவிட்டது. அதன்படி 3,407 என்எம்ஆர் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம்நிர்ணயிக்கப்பட்டது. இப்பட்டியலில் எங்கள் பெயர் இல்லை.
போலி சான்றிதழ் கொடுத்தவர்களின் பெயர்கள் என்எம்ஆர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரின் பெயர்களும், பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவும், போலி சான்றிதழ் கொடுத்து பணி பெற்றவர்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்களில் 3 பேர் மட்டுமேநேரடியாக என்எம்ஆர் தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் பணி வழங்க வேண்டும். மற்ற 17 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் பொதுப்பணித் துறையில் என்எம்ஆர் தொழிலாளர்களை நேரடியாக நியமிக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தவர்களை மட்டுமே என்எம்ஆர் தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும்.
என்எம்ஆர் தொழிலாளர்களாக நியமிக்கப்படுபவரின் வயது வரம்பு, கல்வித் தகுதி, உடல் தகுதி குறித்துஅரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என்எம்ஆர் தொழிலாளர்களுக்கு பிளஸ் 2 அதிகபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். பட்டதாரிகளை என்எம்ஆர் தொழிலாளர்களாக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

You may also like...