நாடாளுமன்ற ஜனநாயகம்” என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

அரசியல் சாசனத்தின் பாவச் செயலாக, கட்சித் தாவல் பார்க்கப்பட வேண்டும்.. அபிஷேக் சிங்வி பேச்சு
By Veerakumar
Updated: Sat, Aug 1, 2020, 20:10 [IST]

சென்னை: நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான அபிஷேக் மனு சிங்வி உறுதிபட தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் j ரவீந்தரன், ஏற்பாட்டின் பேரில்,august 3rd (சனிக்கிழமை) வீடியோ கான்பரன்ஸ் மூலம் “நாடாளுமன்ற ஜனநாயகம்” என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
Abhishek Manu Singhvi insists the need to preserve parliamentary democracy
அபிஷேக் சிங்வி தனது உரையில் கூறியதாவது: 1930 முதல் 1950க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் காலனி நாடுகள் பல விடுதலை பெற்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு கண்டங்களில் உள்ள 30 அல்லது 40 நாடுகள் இந்த காலகட்டத்தில் விடுதலை பெற்றன. ஆனால் இந்தியா என்ற ஒரே நாடு மட்டும்தான் ஜனநாயகம் கொண்ட நாடாக உருவானது. ஏன் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் என்னிடம் பதில் இல்லை. ஒருவேளை நமது அதிர்ஷ்டம் காரணமாக இருக்கலாம். அல்லது காந்தி மற்றும் நேரு ஆகியோர் தொடர்ந்து நமது தலைவர்களாக வாய்க்கப்பெற்றது ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது சிலர் தாங்கள் தும்மினால் கூட, அது நேருவால் கொடுக்கப்பட்ட ஜலதோஷம் என்று கூறுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஜனநாயகம் இந்தியாவில் மலர்வதற்கு காந்தியும், நேருவும் முக்கியமான காரணம்.
நமது நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது வித்தியாசமானது. பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒன்றாக இருந்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இப்படியான ஜனநாயகம் இருக்க முடியாது. ஜனநாயகத்தின் இந்த ஆன்மா காப்பாற்றப்பட வேண்டும். ஆனால் பழிவாங்குவது, குறுகிய எண்ணம் கொண்ட அரசியல் சமீபகாலமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறது.
Advertisement

Powered By PLAYSTREAM
நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சில சீர்திருத்தங்கள் தேவை என்று நினைக்கிறேன். அது உடனடியாக நிறைவேறுமோ, இல்லையோ, ஆனால் இதுபோன்ற கருத்தரங்குகளில் பேசப்பட வேண்டியது அவசியம். வெள்ளிக்கிழமை மாலை கொண்டுவரப்படும் தனியார் மசோதாக்களை தவிர, மக்கள் பிரதிநிதிகளால் புதிதாக ஒரு சட்டத்தை முன்னெடுக்க முடிவதில்லை. தனிநபர் மசோதா தாக்கல் அவ்வளவு எளிதாக நிறைவேறுவதும் கிடையாது. அமைச்சரவைதான் சட்டங்களை இயற்றுவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் ஒரே இடமாக இருக்கிறது. எனவே, ஒரு எம்பி, சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் கொண்டிருக்கவேண்டும்.
எம்பிகள், சட்ட மசோதா தாக்கல் செய்யக் கூடிய அதிகாரம் கொண்டிருக்கவேண்டும். கட்டாயம் அது நிறைவேற்றியே தீர வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்ற போதிலும், அந்த அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டும். ஒரு சட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்சியின் கொள்கை அங்கு புகுத்தப்படுகிறது. இதனால், புதுப்புது யோசனைகளை முன்வைக்க முடிவதில்லை. பட்ஜெட் போன்ற நிதித்துறை சார்ந்த மசோதாக்கள் மற்றும் அரசு கவிழுவதை போன்ற சூழ்நிலை போன்றவற்றின்போது மட்டும், கொறடா உத்தரவை பிறப்பித்து கொள்ளலாம். சட்ட மசோதாவிற்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது புதுமைகளை முடக்கிப் போட்டுவிடும்.
இந்த கொறடா உத்தரவால், தனி நபர் கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில், கொறடா உத்தரவை முழுமையாக அகற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், சட்ட மசோதாக்கள் மீது எம்பிக்கள் முடிவெடுக்கும் உரிமையை கொடுக்க வேண்டும்.
Abhishek Manu Singhvi insists the need to preserve parliamentary democracy

ஹரியானா மாநிலத்தில், ஒரு எம்எல்ஏ, ஒரே நாளில் மூன்று கட்சிகள் தாவினார். எனவேதான் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும், கட்சி தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுப்பதற்கு விரைந்த காலக்கெடு அவசியம். சபாநாயகர் நீண்ட காலத்திற்கு முடிவெடுக்காமல் இருக்கும் சம்பவத்துக்கு தமிழகமே ஒரு உதாரணம். சபாநாயகரின் முடிவு தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு போனது, பிறகு உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு போனது. இன்னொரு தந்திரம் என்னவென்றால் உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். ஒருவழியில், அரசை கலைப்பதற்கு இவர்கள் துணையாக இருந்தாலும் கூட, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சிக்குவது கிடையாது. கட்சித் தாவல் என்பது அரசியல் சாசன பாவச் செயலாக பார்க்கப்படுகிறது. எனவே கட்சித் தாவலை தடை செய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
அடுத்ததாக ஆளுநர் பதவியில் சீர் திருத்தம். தற்போது ராஜஸ்தானில் நீங்கள் பார்ப்பது ஆளுநர் எப்படி செயல்பட கூடாது என்பதற்கான உதாரணம். ஒரு ஆளுநரின் செயல் அமைச்சரவை பரிந்துரை செய்ததும் சட்டசபையை கூட்ட அனுமதிப்பதுதான். ஆளுநர் அதிகாரம் அது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே. ஒரு விளையாட்டு அரங்கத்தின் காவலாளி போன்றவர் ஆளுநர். ஆளுநர் பதவி மைதானத்தின் கேட்டை திறந்து விடும் பாதுகாவலர் போன்றதே. அவர் உள்ளே வந்து விளையாட முடியாது. யார் யார் விளையாடுகிறார்கள், எந்த வீரர் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர் முடிவெடுக்க முடியாது.

Abhishek Manu Singhvi insists the need to preserve parliamentary democracy
அமைச்சரவை முடிவு எடுத்த பிறகு, சட்டசபையை கூட்டுவதற்கு ஆளுநர் ஒரு மாத காலமாக அனுமதிக்காமல் இருப்பது சரியா என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியவர்களே அதை அழிக்க கூடியவர்களாக மாறி விட்டார்கள் என்பது துரதிருஷ்டவசமானது. நமது அரசியல், சாசனத்தில் ஒரு அமைச்சர் பொறுப்பேற்றதும், ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனால் எளிதாக ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்து, பிறகு அமைச்சர் ஆகிவிடுகிறார். பிறகு தேர்தலில் போட்டியிடுகிறார், அல்லது மேலவை உறுப்பினராக்கப்படுகிறார். எனவே, ஒரு மக்கள் பிரதிநிதி ராஜினாமா செய்தால் குறைந்தபட்சம் ஒரு வருட காலத்துக்கு அவருக்கு மறுபடி அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்று சட்டத்தில் ஒரு சிறிய மாற்றம் கொண்டு வந்தால் போதும், பல ராஜினாமாக்கள் நடைபெறாது.

உறுதியளிக்க முடியாது.. அப்போதே எச்சரித்த ராஜ்நாத் சிங்.. லடாக்கில் வேலையை காட்டும் சீனா.. பின்னணி!
சபாநாயகர் என்பவர் ஒரு கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததும் அவர் தனது தாய் கட்சியிலிருந்து அனைத்து உணர்வுபூர்வமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கிலாந்தில், சபாநாயகர் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பிறகுதான் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு மனதாக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே அவர் பாரபட்சமின்றி நடந்து கொள்வார். ஆனால் நமது நாட்டில் ஒரே நாளில் காகம் அன்னப்பறவையாக மாற வேண்டும் என்றும், அன்னப்பறவை ஒரே நாளில் காகமாக மாற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். இது நடைமுறையில் நடக்கக் கூடிய விஷயம் இல்லை.
நாடாளுமன்றத்தின் அமர்வு நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னர் பிடில் வாசித்தது போல நாடாளுமன்றம் செயல்படக் கூடாது. நாடாளுமன்றத்தின் பணிகள் தடைபடக்கூடாது. அமளி கூடாது என்று சட்டம் இயற்றுபவர்கள் அமளியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக சென்று, தர்ணா நடத்தும் உறுப்பினரின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட வேண்டும். அந்த உறுப்பினரை சஸ்பெண்ட் செய்யலாம். இரண்டு அல்லது மூன்று முறை இதே போன்று அந்த உறுப்பினர் செய்தால், அந்த கூட்டத் தொடர் முழுக்க அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இதற்கான அதிகாரம் இருந்தும், சபாநாயகர் அதை செய்வது கிடையாது. இதை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

ஆதார் சட்டம் லோக்சபாவில் மட்டும் நிறைவேற்றி அமல்படுத்தப்பட்டது. அதை நிதி சார்ந்த சட்டம் என்று வரையறை செய்து விட்டார்கள். எனவே இது போல ராஜ்யசபாவை தாண்டிச் செல்லக்கூடாது. இது ஒரு மோசடி என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை என்பதற்காக குறுக்கு வழிகளை தேர்ந்தெடுக்க கூாடது. நான் மேலே குறிப்பிட்ட சீர்திருத்தங்களை முழுவீச்சில் செயல்படுத்தினால் நாடாளுமன்ற ஜனநாயகம் மேலும் மேம்படும்.. வெற்றிபெறும். இவ்வாறு அபிஷேக் சிங்வி தனது உரையில் தெரிவித்தார்.

You may also like...