தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தேவையான காவல்துறை பாதுகாப்பை

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தேவையான காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டுமென தஞ்சாவூர் எஸ்.பி.-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சியின் மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை பார்வையிட்ட நீதிபதிகள், வாக்குச் சீட்டை ஒருவர் பறித்து செல்கிறார். அவரை தடுக்காமல் தேர்தல் ஆணைய அதிகாரிகளும், காவல் துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நடத்தும் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் 26க்கு பதிலாக மார்ச் 23ஆம் தேதியே மறைமுக தேர்தல் நடத்தபடும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், அதற்கு தேவையான காவல்துறை பாதுகாப்பை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மீண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தால், தேர்தல் அதிகாரிகள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என எச்சரித்துள்ளனர்.

You may also like...

Call Now ButtonCALL ME