ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கக்கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரான டி.கணேஷ்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகத்தின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டம் மத்திய அரசு வகுத்த விதிகளின்படி, சுகாதார துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரில் தொடங்கி, கடந்த மே மாதம் முதல் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவின்படி, தொற்று பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள், அத்தியாவசிய சேவை துறைகள், மாற்று திறனாளிகள், தொழில் நிறுவன ஊழியர்கள் என தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 6ஆம் தேதி வரை சுகாதார துறையை சேர்ந்த 8,55,165 பேர், முன்களப் பணியாளர்கள், 11,09,196, 18 முதல் 44 வயது வரையிலான 54,74,237 பேர், 45 முதல் 59 வயது வரையிலான 52,63,657 பேர், 60 வயதிற்கு மேற்பட்ட 3227877 பேர் என 1,59,30,132 பேர் பலனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதுவரை எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என்றும், அவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்போது, பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கில் பல்கலைகழக மானிய குழுவை எதிர்மனுதாரராக சேர்த்தது போல, இந்திய பார் கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், இந்திய பார்மசி கவுன்சில் ஆகியவற்றையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...