Ilayaraja case Nsj order
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை அவரின் அனுமதி பெறாமல் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்திய விவகாரத்தில், சோனி நிறுவனத்தை வழக்கில் இணைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன்னுடைய அனுமதியில்லாமல் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இசையமைப்பாளர் இளையராஜவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடை நீக்க கோரி, ‘மைத்திரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இளையராஜா பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதி செந்தில் குமார் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி, குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை சோனி நிறுவனத்திடம் இருந்து உரிமை பெற்று தான் பயன்படுத்தியதாகவும்,
தற்போது இளைராஜா இசையமைத்த சம்பந்தப்பட்ட பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன், சோனி நிறுவனம் யாரிடம் அனுமதி பெற்று தன்னுடைய பாடல்களை பயன்படுத்த அனுமதி வழங்கியது என்பது தங்களுக்கு தெரியவில்லை என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சோனி நிறுவனத்தை வழக்கில் இணைத்து மனுத்தாக்கல் செய்ய இளையராஜாவுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.