ஆளும் கட்சி, எதிர்கட்சி என பாகுபாடு இன்றி காவல்துறை பணியாற்ற வேண்டும். காவல்துறை அரசுக்கு தான் பணியாற்ற வேண்டுமே தவிர அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றக்கூடாது

02.11.2026

ஆளும் கட்சி, எதிர்கட்சி என பாகுபாடு இன்றி காவல்துறை பணியாற்ற வேண்டும். காவல்துறை அரசுக்கு தான் பணியாற்ற வேண்டுமே தவிர அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றக்கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், முதல்வரை அவதூறாக விமர்சித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக கவுன்சிலருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் கவுன்சிலர் சுதா, முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், கவுன்சிலர் சுதாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு, மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்; 60 வயது பெண்ணான கவுன்சிலருக்கு எதிராக இதற்கு முன் வேறு எந்த வழக்குகளும் இல்லை; அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் வீடியோக்களில் உள்ளன; அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பிலும் கோரப்படவில்லை; அவர் தலைமறைவாகி விடுவார் என்றோ, ஆதாரங்களை கலைப்பார் என்பதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அடுத்த 15 நாட்களில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற வேண்டும்; மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, எஸ்பிளனேடு போலீஸ் முன் தினமும் காலை 10:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனைகள் விதித்துள்ளார்.

மேலும் அந்த உத்தரவில், அரசு உயர் பதவி வகிப்பவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்பு தன்மை இருக்கவேண்டும்; விமர்சனங்களை முடக்குபவர்களாக இருக்க கூடாது. முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசினால், அவதூறு வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமே தவிர, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய கூடாது எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் கவுன்சிலர் சுதா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், அரசியல் பேச்சைத் தவிர வேறு எதுவும் இல்லை. எவ்வளவு கடுமையான பேச்சாக இருந்தாலும், அந்த பேச்சு வன்முறையை தூண்டினால் மட்டுமே, தண்டனை சட்ட வரம்புக்குள் வரும். சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது; இடைப்பட்ட காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை என, நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்திலும், இந்தியாவிலும் அரசியல் விவாதங்கள் சமூக ஊடகங்களிலேயே நடக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் ஐ.டி. பிரிவுகள் உள்ளன; அதில் தினந்தோறும் மாற்றுக்கட்சியினரை வசைபாடுகின்றனர். அனைத்து தரப்பில் இருந்தும் இதுசம்பந்தமாக புகார்களும் வருகின்றன; ஆளுங்கட்சியினர் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஆளும் கட்சி, எதிர்கட்சி என பாகுபாடு இன்றி காவல்துறை பணியாற்ற வேண்டும். காவல்துறை அரசுக்கு தான் பணியாற்ற வேண்டுமே தவிர அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றக்கூடாது என கூறியுள்ளார்.

பொருளாதார ஆய்வாளர் கலையரசன் கைது விவகாரத்தில் மேலிடத்தில் மன்னிப்பு கேட்டது என்பது நிகழந்த தவறுக்கு பொறுப்பேற்பது ஆகாது எனவும் முதலமைச்சர் தலையிட்டதால் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு தீர்வாக அமையாது எனவும் நீதிபதி குறிபிட்டுள்ளார்.

ஊடகங்கள் கவனிக்கும் போது பிரபலமான ஒருவர் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை வைத்து காவல்துறையை மதிப்பிட முடியாது எனக் கூறியுள்ள நீதிபதி, யாரும் பார்க்காதபோது ஒரு எளிய மனிதனை காவல்துறை எப்படி நடத்துகிறது என்பதை வைத்து தான் காவல்துறையை மதிப்பிட முடியும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

உயர் பதவிகளை வகிப்பவர்கள் தாங்கள் விமர்சனத்திற்கும், கேலிக்கும், அவதூறுகளுக்கும் ஆளாவோம் என்று தெரிந்து தான் அந்த பொறுப்பில் இருக்கிறார்கள் அப்படி பட்ட சூழலில் ஒரு கவுன்சிலர் விமர்சிப்பதால் அந்த மதிப்பு வீழாது என கூறியுள்ள நீதிபதி அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் எனக்கூறி நடவடிக்கை எடுக்கும் போது அதன் மதிப்பு குறைவதாக குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com