ஆதீனம்/ நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தை காவல்துறை அரசியல் நோக்கத்துடன் வழக்காக பதிவு செய்து பெரிது படுத்தி இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

மதுரை ஆதினத்திற்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவை அக்டோபர் 27ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதுகுறித்து பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக மதுரை ஆதினம் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆதினத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில், மதுரை ஆதினம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் விதத்தில் சர்ச்சையாக பேசியதால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்காவல்துறை விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மதுரை ஆதினம் முரணாக பதிலளிப்பதாகவும், மதுரை ஆதினம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மதுரை ஆதினம் தரப்பில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், காவல்துறையினர் சிலர் சீருடையில்லாமல் விசாரணைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும் என்றும் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில்
இந்த விவகாரத்தை காவல்துறை அரசியல் நோக்கத்துடன் வழக்காக பதிவு செய்து பெரிது படுத்தி இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை நிலை குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்த உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 27 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதுவரை மதுரை ஆதினத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் காவல்துறை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com