Wla funtion mhc sc judges

சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 62-ம் ஆண்டு விழா உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் ஆர். ராஜலட்சுமி வரவேற்றார். சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி தலைமை வகித்தார். செயலாளர் ஏ.பர்வீன் ஆண்டறி்க்கை வாசித்தார்.
விழாவில் பங்கேற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ‘‘ நாட்டிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கமாக இந்த சங்கம் திகழ்கிறது. அந்தக்காலகட்டத்தில் பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம் கிடையாது. ஆனால் எல்லா தடைகளையும் தாண்டி பெண்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பெண்கள் ஆண்களுக்கு நிகராக திறமைகளை வளர்த்து சாதனை படைத்து வருகின்றனர். தற்போது கல்வி கூடங்கள், வேலைவாய்ப்பு என எல்லா இடங்களிலும் பெண்கள் தான் அதிகளவில் உள்ளனர், என்றார்.
விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், ‘‘ பெண்கள் குடும்பத்தை மட்டுமே நிர்வகிக்க தெரிந்தவர்கள் எனக்கூறுவது சரித்திர பிழை. பெண்கள் ஆட்சி புரிவதிலும் வல்லவர்கள் என்பதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக்காட்டியுள்ளனர். கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு இந்தியாவிலேயே முதல் பெண் வழக்கறிஞராக பதிவு செய்தவர் கார்னிலியா. அந்த நிலை தற்போது இல்லை. அந்தக்காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. இந்த சமுதாயம் எப்போது பெண்களை மதிக்க கற்றுக்கொள்கிறதோ அப்போதுதான் மண்ணும், நாடும் உயரும் என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப பெண்கள் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் மேலோங்கி வர வேண்டும். சமூகமும், காலமும் ஒன்றாக நிலைத்து நிற்பதில்லை. ஆக்வே பெண் வழக்கறிஞர்களின் நோக்கமும், செயல்பாடுகளும் சட்ட அறிவு சார்ந்த வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு தங்களைத்தாங்களே வாழ்வில் உயர்த்திக்கொள்ள வேண்டும், என்றார்.
இறுதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘‘ அந்தக்காலத்திலேயே பெண்கள் கல்வி, செல்வம் என அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக, பிரதானமாக திகழ்ந்துள்ளனர். அதனால் தான் நீதித்துறையிலும் நீதித்தாய் என புகழாரம் சூடுகிறோம். எந்த சமுதாயத்தில் பெண்களின் நிலைப்பாடு உயர்ந்திருக்கிறதோ அந்த சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயம். அந்த வகையில் தமிழ் சமுதாயம் பெண்கள் சார்ந்த வளர்ந்த, உயர்ந்த சமுதாயம். பெண்களுக்கு இயற்கையாகவே வாதாடும் திறமை உண்டு. பெண்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது என்பதை வீட்டிலேயே நாம் தினம்தோறும் எதிர்கொண்டு வருகிறோம். அதேபோல தவறை சுட்டிக்காட்டும் போர்க்குணமும் பெண்களுக்கு உண்டு. பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இது மாறுகின்ற காலகட்டம். அதற்கேற்ப நம்மை நாமே தயார்படுத்தி கொள்ள வேண்டும். பெண்கள் உலகம் போற்றும் தத்துவஞானி ஒளவையார் போல தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீதித்துறையில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய சூழல் தற்போது இல்லை. விவாகரத்து வழக்குகளும், சைபர் குற்றங்கள் போன்ற வணிக குற்றங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த சமூக மாற்றம் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அற்புதமான காலகட்டம். அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர். பெண் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பணியிடங்களில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. உண்மையில் அனைத்து தரப்புக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதால், நாங்கள் நினைப்பதை சிலநேரங்களில் செயல்படுத்த முடியவில்லை, என்றார்.
விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், அனிதா சுமந்த் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். இறுதியாக பெண் வழக்கறிஞர்கள் சங்க நூலகர் மார்கரேட் லாரன்ஸ் நிகழ்வை தொகுத்து வழங்க, பொருளாளர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com