Smsj kumarappan bench mine case

தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை தடுப்பதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கோரி நடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கனிம வள கொள்ளையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கடந்த 2022 ம் ஆண்டு முதல் 2025 ஏப்ரல் மாதம் வரை 4 வருடங்களில் கனிம வளங்கள் திருடப்பட்டது தொடர்பாக 24 தனி நபர் புகார்கள் பெறப்பட்டு 1,439 பகுதிகளில் சட்டவிரோத கனிம வளங்கள் திருடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் கனிம வள கொள்ளையை தடுப்பதற்காக அதை எடுத்து செல்லும் வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வரும் 2026 ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் முழுமையாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், கனிம வள கொள்ளையில் ஈடுப்படுவர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்கும் அரசு அதிகாரிகளின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் 5 கோடி ரூபாய் அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பதால் என்ன பயன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசின் நிர்வாகமே பாதிக்கப்படும் அளவிற்கு கனிம வள கொள்ளையர்கள் மாஃபியாக்களாக செயல்படுகின்றனர் தெரிவித்தனர்.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் பொதுசொத்துகளான கனிம வளங்களை கொள்ளை போவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையது அல்ல என குறிப்பிட்ட நீதிபதிகள்,
சட்ட விரோத கனிம வள கொள்ளையில் ஈடுப்படுவர்களை தடுக்க அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கனிம வள கொள்ளை தொடர்பாக புகார் அளிக்கும் பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version