Rc Paulkanakaraj tamil பேட்டி after joining bjp
Home National
“சமூக போராளி சிந்தனை கொண்ட என் கொள்கைக்கு ஏற்ற கட்சி பாஜக”: -வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ்
June 15, 2020
0
SHARES
“சமூக போராளி சிந்தனை கொண்டவன்; என் கொள்கைக்கு ஏற்ற கட்சி என்பதால் பாஜகவில் இணைந்தேன்” – என்று வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இருமுறை தலைவராக இருந்தவர் வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ். 2014-ம் ஆண்டில், “தமிழ் மாநில கட்சி” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். தற்போது, தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினராக இருந்து வருகிறார். வழக்கறிஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்து வரும் இவர், பாஜக மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில், அக்கட்சியில் தனது கட்சியினருடன் சேர்ந்தார். இவரது திடீர் பாஜக இணைப்பு வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சூழலில், பாஜகவில் சங்கமித்தது ஏன்? காரணம் என்ன என்பது பற்றிய பல கேள்விகளுக்கு விடை காண ” கோர்ட்சர்க்கிள். காம்” இணையவழி செய்தி தளம் வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ்- உடன் பேட்டி கண்டது. அந்த பேட்டியின்போது எழுப்பப்பட்ட பலதரப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- அரசியல் கட்சி வைத்து நடத்தி வந்த நிலையில், பாஜகவில் இணைந்த இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
பதில்:- இது, திடீர் முடிவு அல்ல. பல நாள் யோசித்து எடுத்த முடிவு ஒன்றுதான்.
கேள்வி:- தமிழ்நாட்டில் பல மாநில கட்சிகள் இருக்கும் நிலையில், தேசிய கட்சியான பாஜகவில் சங்கமித்தது ஏன்?
பதில்:-இங்குள்ள மாநில கட்சிகள் மீது நம்பிக்கையில்லை என்ற காரணத்திற்குதான், “தமிழ் மாநில கட்சி” என்ற பெயரில் ஒரு கட்சியே ஆரம்பித்தேன். மாநில கட்சிகளின் கொள்கை, கோட்பாடுகளில் உடன்பாடு இல்லாததால்தான் கட்சி தொடங்கினேன். பாஜகவின் 6 ஆண்டு கால ஆட்சியை பார்த்து வந்தேன். எனது கட்சியின் கொள்கை, கோட்பாட்டுடன் ஒத்துபோனதால், பாஜகவில் இணைந்தேன். மத்தியில் இருக்கும் பாஜக ஊழலற்ற ஆட்சி நடத்துகிறது. இந்த நிலை, மாநிலத்தை ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளிடத்தில் இல்லை. பாஜகவில் உண்மையாக, கடுமையாக உழைத்தால், சாமானியரும் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும். இதையெல்லாம் எண்ணி பார்த்த பின்பு, பாஜகவினால் ஈர்க்கப்பட்டு சேர்ந்தேன்.
கேள்வி:- தேசிய கட்சியில் சேர்ந்து விட்டதால், இனி முழு நேர அரசியல்வாதியா? இல்லை வழக்கறிஞராய் இருந்து பணியை தொடர்வீர்களா?
பதில்:- வழக்கறிஞர் பணி என்பது எனது வாழ்வாதார தொழில். அதைவிட மாட்டேன். கட்சிக்கும் வேலையும் செய்வேன்.
கேள்வி:- பார்கவுன்சில் உறுப்பினர் பதவிக்காக தாங்கள் தொடங்கிய கட்சியிலிருந்து விலகி, தேர்தலை சந்தித்தீர்கள். இப்போது, மீண்டும் குறுகிய காலத்தில் பாஜகவில் இணைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன?
பதில்:- அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், நிர்வாகிகள் பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதிகள் கொண்டுவர முயன்றனர். ஆனால், அதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தற்போது பார்கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் பலர், பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், பாஜகவில் நான் சேர்ந்தது தவறில்லை.
கேள்வி:- பாஜக என்றாலே, தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட கட்சி, மதவாத கட்சி என்ற பார்வை உள்ளது. அந்த கட்சியில் சேர்வதற்கு தேர்வு செய்யப்பட்ட நியாயமான காரணம் கூறுங்கள்?
பதில்:- தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டு காலம் திமுக, அதிமுக எனும் இருபெரும் திராவிட கட்சிகள்தான் மாறிமாறி ஆட்சி செய்து வருகிறது. மக்களும் இவ்விரு கட்சிகளுக்கும்தான் மாறிமாறி வாக்களிக்கப் பழக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், தேசிய கட்சியான பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதில் உண்மை இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் உழைத்து கொண்டுதான் இருக்கிறது. அதேநேரத்தில், திராவிட கட்சிகள் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் மறைந்து வருகிறது. பாஜக மீது, மக்களிடத்தில் நம்பிக்கை வந்து விட்டால், தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள். நிறைய பேர் பாஜகவில் சேர்வார்கள். இக்கட்சியில்தான், உழைத்தவர் முன்னேறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மற்ற கட்சியில் வாரிசு அரசியல்தான் உள்ளது. அவர்கள்தான் முக்கிய இடத்துக்கு வரமுடியும்.
கேள்வி:- கலைஞர்- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் என்ற கோட்பாடு வளர்ந்து வரும் நிலையில், ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற தேசியக் கொள்கை, சித்தாந்தம் இங்கு எடுபடும் என்று நினைக்கிறீர்கள்!
பதில்:- தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் தமிழர்கள்தானே. அவர்களுக்கும் தமிழ்நாடு, தமிழ் மீது பற்று இருக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காத தமிழ் தேசியத்தை முன்னெடுப்போரும் பாஜகவில் இருக்கத்தான் செய்கின்றனர். தேசிய கொள்கை என்பது ஒன்று சேர்ந்த மாநிலங்களின் வளர்ச்சிதான். மாநில நலனில் ஒருபோதும் பாஜக குறுக்கிடுவது கிடையாது. இந்தி பேசாத மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும். தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்ததால், ஒரு தலைமுறைக்கு இந்தி தெரியாமல் போய்விட்டது. இந்தி திணிப்பு கூடாது என்பதுதான் என் கருத்து. ஆனால், இந்தி படிக்க வாய்ப்பு அளிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. ஆங்கிலம் உலக மொழி. இணைப்பு மொழியாக இருக்கிறது. இந்தியாவில் பிற பகுதிகளில் இருப்பவர்களிடம் பேச இந்தி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனாலேயே தமிழ் அழிந்துவிடும் என்று கூற முடியாது. அண்டை மாநிலங்களில் இந்தி இருப்பதால், அம்மாநில மொழிகள் அழிந்து விட்டதா? தமிழை புறக்கணித்துதான் இந்தி வரவேண்டும் என்று சொல்ல வில்லை. சாதாரண மக்களும் இந்தி படிக்க வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
கேள்வி :- அப்படியெனில், தமிழ் தேசியத்தை முன்னிலை படுத்துவீர்களா?
பதில் :-தமிழ்நாட்டை தமிழந்தான் ஆள வேண்டும். மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்பது மட்டும் தமிழ் தேசியம் அல்ல. தமிழன் அல்லாதவர்களுக்கு ஆட்சியில் உரிமை கொடுக்க மாட்டோம் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தமிழ்நாடு ஒரு மாநிலம். நாடு அல்ல. தமிழன் பிரதமர் ஆகலாம். இதற்கு பிற மாநிலத்தவர்கள் ஆள கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. பிரிவினைவாத தமிழ் தேசியம் ஏற்க மாட்டேன். அது பாசாங்கம் செய்யும் தமிழ் தேசியம்.
கேள்வி :- பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பார்வை உள்ளது. சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த நீங்கள் பாஜகவில் இணைந்து விட்டீர்கள். இதை எப்படி உங்களை சுற்றியுள்ள சிறுபான்மை சமூகத்தினர் ஏற்பார்கள்?
பதில் :-பாஜக சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான கட்சி என்ற குறுகிய பார்வை உள்ளது. அது ஒரு அரசியல் கட்சி. அரசியலைப்பு சட்டதிற்கு உட்பட்ட ஒன்று. அக்கட்சியின் சட்டதிட்ட விதிகள் அனைத்தையும் படித்து பார்த்து, ஆராய்ந்த பின்னரே, அக்கட்சியில் இணைந்தேன். இந்துக்களுக்கான கட்சி அல்ல. இருந்திருந்தால் சேர்ந்திருக்க மாட்டேன். என்னையும் அவர்கள் சேர்த்திருக்க மாட்டார்கள். பாஜகவில் பல அமைப்புகள் சேர்ந்திருக்கலாம். அக்கட்சியிலும் சிறுபான்மையினர் பிரிவு உள்ளது. நான் ஒரு சமூக போராளி, சிந்தனை கொண்டவன். என் கொள்கைக்கு ஏற்புடைய கட்சியை தேடி பார்த்துதான் இணைந்தேன்.
கேள்வி :-பாஜகவிற்கு வழக்கறிஞர் அணி பலம் குறைவுதான். அதை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவீர்களா? அதற்கு வழக்கறிஞர்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கா?
பதில் :-அரசியலுக்கும், வழக்கறிஞர் பணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ் மாநில கட்சி வைத்திருந்த போதும், அதை பார்த்துதான் வழக்கறிஞர்கள் எனக்கு ஆதரவு தந்தனர். வழக்கறிஞர்கள் நலன் மீதான எனது செயல்பாடு, நடவடிக்கைகள் வைத்துதான் ஆதரவு தந்தனர். பாஜகவில் திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அடையாளப் படுத்தப்படவில்லை. அவர்களின் திறமை வெளி உலகிற்கு கொண்டு வரப்படும்.
கேள்வி :-பெரிய கட்சியில் இணைப்பு- ஏதேனும் பதவி எதிர்பார்ப்புடன்தான் சேர்ந்தீர்களா?
பதில்: பாஜகவில் இணைவதற்கு நான் எந்தவித டிமாண்டும் வைக்கவில்லை. அக்கட்சியில் உழைத்தால் சாமானியனுக்கும் வாய்ப்புண்டு. சாதாரண தொழிலாளியாக இருந்த மோடி, இன்று நாட்டின் பிரதமர் ஆகவில்லையா! உழைப்புக்கு ஏற்ற பலன், நிச்சயம் இங்கு உண்டு.
கேள்வி :-தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி?
பதில் :-அரைத்த மாவுதான் மீண்டும் மீண்டும் அரைக்கப்படுகிறது. மாற்று அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மாற்று அரசியல் முன்னெடுக்கும்போது, பாஜகவுக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.
கேள்வி :-நாட்டையே ஆளும் பாஜகவுக்கு இங்கு ஆதரவு இல்லை என்பதுதானே நிதர்சனம்! தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவு இல்லையே?
பதில் :-தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை, எம்.பி., தேர்தலுக்கு ஒருவிதமாக வாக்களிப்பார்கள். எம்.எல்.ஏ., தேர்தலுக்கு வேறுவிதமாக வாக்கு போடுவார்கள். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற பாஜக தொடர்ந்து பாடுபடும். அதற்காக, இங்குள்ள தலைவர்கள் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கேள்வி :-ஆனால், தமிழ்நாட்டில் பாஜக கொண்டு வரும், மீத்தேன் எரிவாயு திட்டம், எட்டு வழிச்சாலை திட்டம், ஓ.பி.சியினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது, இந்தி திணிப்பு போன்ற திட்டங்களுக்கு எல்லாம், அரசியலுக்கு அப்பால் மக்களிடத்தில் எதிர்ப்பு உள்ளதே. இதற்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா?
பதில் :-புதிதாக எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள். அரசியல் ஆதாயம் தேட அரசியல் கட்சியினரும் எதிர்க்கத்தான் செய்வார்கள். இந்தி திணிப்பு கூடாதென அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். சரி, இந்தி படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள். பள்ளியில் பல மொழி பாடத்திட்டம் வையுங்கள். அரசு பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் 3- வது ஒரு மொழியை சொல்லி கொடுக்க வேண்டும். ஆகவே, ஒரு திட்டத்தின் சாதகம், பாதக சூழலை கண்டறிந்து, நியாயமாக இருந்தால், கட்சியிடம் அழுத்தம் கொடுப்பேன். மக்கள் நலனுக்கு எதிராக இருந்தால், மத்திய அரசிடமும் எனது எதிர்ப்பை பதிவு செய்வேன். எட்டு வழிச்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு இருக்கு. அதற்காக சாலையே வேண்டாம் என்று சொல்ல முடியாது அல்லவா. எட்டு வழிச்சாலை செயல்படுத்த கேட்டு, அதிமுக அரசுதான், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருக்கு. விளைநிலம் பாதிக்கப்படும்போது மக்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். மக்களின் எதிர்ப்பில் நியாயம் இருந்தால் மட்டுமே, எந்த ஒரு திட்டத்திற்கும் எதிராக குரல் கொடுப்பேன்.
கேள்வி :-சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர், பார்கவுன்சில் உறுப்பினர் என்ற முறையில் வழக்கறிஞர்களுக்கு சொல்ல விரும்புவது, செய்ய விரும்புவது ஏதேனும் உள்ளதா?
பதில் :- கொரோனாவால் வழக்கறிஞர் சமுதாயம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி கிடைக்கவழி செய்ய பாடுபடுவேன். இளம் வழக்கறிஞர்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு அறிவுறை சொல்லும் நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்ள வேண்டும். வழக்கறிஞர் என்ற இமேஜ்ஜை உயர்த்திட பாடுபட வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ் பேட்டியளித்தார்.
Tags: #Advocate BJP#Bar Council Member#BJP- R.C. Paul Kanagaraj#chennai high court
Previous Postசி.ஐ.எஸ்.எப். வீரர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று: