Ponmudy case adj judge sathiskumar ag Raman argued

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என் சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டதாகவும், புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, அது குறித்த விவரங்களை சமர்ப்பித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகார்களில் முகாந்திரம் இல்லை என்று எந்த அடிப்படையில் காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், 1972 ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துக்களையே முன்னாள் அமைச்சர் தெரிவித்ததாகவும், வீடியோவை முழுமையாக பார்த்தால் அந்த விபரங்கள் தெரியவரும் என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், 1972 ஆம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுக்களின் விவரங்களையும் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com