PB Balaji judge stayed the. Civil court order rejecting edapady admk GS petition

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுவில், அதிமுகவின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இ பி எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், நர்மதா ஆகியோர், அதிமுகவின் உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவித்தனர்.
கட்சி உறுப்பினர் அல்லாத சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி, மனு குறித்து சூர்ய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com