Mdmk

காசோலை மோசடி வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார், தகுதிஇழப்பு ஆகிறார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 8 வது பிரிவின்படி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல், ஊழல் குற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, தீண்டாமையை பின்பற்றுதல், போதைப் பொருள் கடத்தல் வழக்குகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் ஆகிய வழக்குகளில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, அபராதம் விதித்தாலே ஆறு ஆண்டுகளுக்கு தகுதிஇழப்பு ஏற்படும். தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

மற்ற குற்றங்களைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி, உடனடியாக தகுதியிழக்கிறார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தகுதி இழப்பு ஏற்படும்.

ஒரு வேளை, தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல் முறையீட்டு வழக்குகளில், ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் தடை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி தகுதி இழப்பு நீங்கி, பதவியில் நீடிக்கலாம். இந்த வகையில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார், தகுதிஇழப்பை எதிர்கொண்டுள்ளார். ஒரு வேளை மேல் முறையீட்டு வழக்கில் ஒட்டு மொத்த தீர்ப்புக்கும் தடை உத்தரவைப் பெற்றால் அவர் பதவியில் நீடிக்கலாம்.

இதேபோல, அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, அவர் எம்.பி. பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com