Madras high court orders nov 9

[11/9, 13:02] Sekarreporter 1: புதுச்சேரியில் எத்தனை பேருக்கு சட்டவிரோதமாக பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களுடன் நாளை நேரில் ஆஜராக அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாகவும், தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து பின் அவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதாக கூறி, புதுவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது,
இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்து விட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து , அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

புதுவை பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக, முறையற்ற பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதால், அரசு உத்தரவை பின்பற்றியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாதிட்டார்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, விருப்பம் போல், வேண்டப்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு உரிமையை மறுக்கும் செயல் என்று தெரிவித்து, புதுவை பொதுப்பணி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமங்களின் தன்மை, எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் நாளை ( 10ம் தேதி) நேரில் ஆஜராக அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[11/9, 13:38] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து சூறையாடப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், அதை திறக்க அனுமதிக்க கோரி வழக்கு…

லதா கல்வி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….

மாணவர்களுக்கான இருக்கைகள், சிசிடிவி கேமரா, பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. தங்கள் பதிலில் ஆய்வுக் குழு திருப்தி – அறக்கட்டளை….

மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் – அறக்கட்டளை….

ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். கிடைத்தபின் முடிவெடுக்கபடும் – அரசு….

வழக்கின் விசாரணையை நவம்பர் 15 தள்ளிவைப்பு…..
[11/9, 13:39] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ததாகவும், அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுப்பியுள்ளதாகவும், தங்கள் பதிலில் ஆய்வுக்குழு திருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் எனவும் அறிக்கை கிடைத்த பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த விசாரணையின்போது அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

இதை ஏற்று, அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
[11/9, 14:48] Sekarreporter 1: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதியாகச் செய்ததாக, பணி ஓய்வு பலன்கள் வழங்க மறுத்ததை எதிர்த்து, மருந்து ஸ்டோர் பொறுப்பாளர் முத்துமாலை ராணி என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாகாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கையை அரசு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியாகாத மருந்துகளை வழங்க ஏதுவாக, கொள்முதல் முதல் விநியோகம் வரை, பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் மருந்துகள் இருந்தால் அவற்றை தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றும் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லாவிட்டால் புகார் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மருத்துவமனைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கபட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளில், விற்பனைக்கு அல்ல என்று அச்சிடப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்று பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும், காலாவதியான மருந்துகளை திரும்பி பெற வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மருந்துகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து திருப்தியும், பாராட்டும் தெரிவித்த நீதிபதி, இதை அமல்படுத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நாட்டில் பிற மாநிலங்களில் இல்லாத மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம் எனவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் எனவும் யோசனை தெரிவித்து, விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[11/9, 16:20] Sekarreporter 1: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை, ராட்சச குழாய்கள் மூலம், சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு,
4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பருவ மழை காலத்தில், மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.

இந்த உபரிநீரை சேலம் மாவட்டம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், பெத்தநாயகன்பாளையம், கெங்கவல்லி பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் ராட்சச குழாய்கள் மூலம் வசிஷ்ட நதி, சுவேத நதி மற்றும் ஏரி – குளங்களுக்கு திருப்பிவிடக் கோரி சேலம் மாவட்டம், புலியங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் என்.பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் பாசன வசதிக்காக வழங்கும் மேட்டூர் அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில், 5 கிராமங்களில் மழையை நம்பியே விவசாயம் உள்ளதால், உபரிநீரை பயன்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, நான்கு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
[11/9, 16:37] Sekarreporter 1: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மீன்பிடி தொழில் செய்து வரும் தேசப்பன் என்பவர், அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள இரண்டு சிறுவர்களை தனது வீட்டிற்கு அருகில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை பார்த்த பெண்மணி சிறுவர்களின் தாய்க்கு தகவல் கூறியுள்ளார்.

இளைஞரிடம் இருந்து மகன்களை காப்பாற்றிய தாய், தேசப்பன் மீது காவல் நிலையதில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை பதிவு செய்த வழக்கில் தேசப்பனை கைது செய்யப்பட்டார் .

2016ல் நடந்த சம்பவம் தொடர்பான் வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்து வந்தார். அப்போது தேசப்பன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆவதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரண்டு பேருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கும் உத்தரவிட்டார்.
[11/9, 19:54] Sekarreporter 1: சென்னை சுங்கத்துறை முதன்மை ஆணையர்க்கு எதிரான பாலியல் புகார் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சுங்கத்துறையில் முதன்மை ஆணையராக பணியாற்றி வருபவருக்கு) எதிராக அதே துறையில் பணியாற்றி வரும் பெண் வருவாய் பணி அதிகாரி (IRS) கடந்த மே மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுங்கத்துறை முதன்மை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அப்துல் குத்தூஸ், துறை ரீதியாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் தலையிட எந்த முகந்திரம் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முதன்மை ஆணையர்ரவி செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பதர சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ரவி, பெண் அதிகாரிக்கு ஒதுக்கிய பணியில் முறையாக செய்யவில்லை என்பதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதால் அது குறித்து விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பியதாகவும் அதற்கு பதில் அளிக்காமல் மனுதரார்க்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ளதாக வாதிட்டார். மேலும் முறையாக குழு அமைத்து விசாரணை நடைபெறவில்லை இதனை தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் எனவே தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் பாலியல் புகார் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், பணியில் முறையாக செயல்படாத காரணத்தால் பெண் அதிகாரிக்கு எதிராக குறிப்பாணை அனுப்பிய நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் முன் சுங்கத்துறை முதன்மை ஆணையர்க்கு எதிரான பாலியல் புகார் அளிக்கபட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை குழுவில் உள்ளவர்களில் இருவர் புகார் அளித்த பெண் அதிகரியுடன் இணைந்து பணியாற்றிய குழுவில் இடபெற்றவர்கள் எனவே முதன்மை ஆணையர்க்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் புகார் தொடர்பான துறை ரீதியான விசாரணை மற்றும் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[11/9, 19:55] Sekarreporter 1: சென்னை சுங்கத்துறை முதன்மை ஆணையர்க்கு எதிரான பாலியல் புகார் விசாரணைக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு……

சுங்கத்துறையில் முதன்மை ஆணையர்க்கு எதிராக அதே துறையில் பணியாற்றி வரும் பெண் வருவாய் பணி அதிகாரி பாலியல் புகார்….

பாலியல் வன்கொடுமை புகார் விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது…..

தனக்கு எதிரான புகார் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுங்கத்துறை முதன்மை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு…..

பெண் அதிகாரிக்கு எதிராக பணியில் முறையாக செயல்படவில்லை என விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பிய பின்னர் பாலியல் புகார் அளிக்கபட்டுள்ளது – நீதிபதிகள்…

பாலியல் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு முறையாக இல்லை எனவே சுங்கத்துறை முதன்மை ஆணையர்க்கு எதிரான விசாரணைக்கு தடை – நீதிபதிகள்

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பதர சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு….

விசாரணை டிசம்பர் 15 ஆம் தேதி தள்ளிவைப்பு…..
[11/9, 21:25] Sekarreporter 1: காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் மீதான லஞ்ச வழக்கில், அமலாக்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கோரி தொழிலதிபரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பஞ்சாப் மாநிலம் மானசாவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிக்காக, 2011ல் சீனா நிபுணர்களுக்காக விசாக்கள் வழங்க லஞ்சம் பெற்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

விசாரணையின் அங்கமாக தொழிலதிபர் ரமேஷ் துஹார் வீட்டில் சோதனை நடத்தி, அவரது லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கோரி ரமேஷ் துஹார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, தொழிலதிபர் ரமேஷ் துஹாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

You may also like...