Madras high court orders april 2

[4/2, 12:10] Sekarreporter: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சமூகத்தில் மதரீதியிலான பிரச்னைகள் ஏற்படும் எனக் கூறி ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொலை செய்த வழக்கில், யாசுதீன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 2001ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி.யை மிரட்டிய வழக்கிலும் தண்டிக்கப்பட்டார்.

இந்நிலையில், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள்களின் போது, ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் அரசாணைகளின் கீழ் யாசுதீனை முன் கூட்டி விடுவிக்க கோரி அளித்த மனுவை நிராகரித்த அரசு உத்தரவை எதிர்த்து அவரது தாய் ஜெய்தூன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட யாசுதீனை விடுதலை செய்தால் மதரீதியாக பிரச்னைகள் ஏற்படும் எனவும், கைதியின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் முன்கூட்டி விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் கூறினர்.

மேலும், இந்த வழக்கில் ஆயுள் கைதியின் உயிருக்கு அச்சுறுத்தல், விடுதலை செய்தால் மதரீதியாக பிரச்னை ஏற்படும் என்பன போன்ற அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, யாசுதீனை முன்கூட்டி விடுதலை செய்ய மறுத்துள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக்கூறி, அரசு உத்தரவில் தலையிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.
[4/2, 13:49] Sekarreporter: கனரக சரக்கு வாகன கட்டமைப்பு தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்துகளை தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கவும் கனரக சரக்கு வாகனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து, அவற்றை சட்டமாக இயற்றிய மத்திய அரசு அதனை கடந்த 2019ம் ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டது.

அந்த வழிமுறைகளை தமிழக அரசோ, வாகனங்களை பதிவு செய்யும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களோ பின்பற்றவில்லை என்பதால், மத்திய அரசு சட்டத்தை பின்பற்ற உத்தரவிடக் கோரிய கனரக சரக்கு வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த சுஜித் பிரபு துரை என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லாமால், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

எந்த வித ஆதாரங்களும் இன்றி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆதாரங்களை சமர்பிக்க இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டும் ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கூறி 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த அபராத தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
[4/2, 16:15] Sekarreporter: சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து, சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜனிடம் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனக் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், பணிநியமனம் வழங்குவதாக கூறி எவரிடமும் பணம் பெறவில்லை எனவும், புகார் அளித்த குணசீலன் தங்கள் உறவினர் என்றும் குடும்ப பகை காரணமாக தங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர்கள், தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்பட்டதாகவும், இந்த புகார் தொடர்பாக ராசிபுரம் போலீசார் ஏற்கனவே தங்களை விசாரித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 25 லட்ச ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமெனவும், இருவரும் இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளர். அதன்பின்னர் மறு உத்தரவு வரும்வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார்.
[4/2, 16:48] Sekarreporter: சிதம்பரம் நடராஜர் ஆலய கனக சபை மண்டபத்திற்குள் அனுமதிக்கக்கோரி போராட்டம் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தீட்சிதர்களை விரும்பாத ஒரு குழுவினர், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும், கோவில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி கோவிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, கனகசபை மண்டபத்தை திறக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை வற்புறுத்துவதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போரட்டம் நடத்த அனுமதிக்கூடாது என மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மேலும் கோவில் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பொது தீட்சிதர் செயலாளருக்கும், விருத்தாச்சலத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[4/2, 17:16] Sekarreporter: திருமணமாகி 10 ஆண்டுகள் பிரிந்திருக்கும் தம்பதிக்கு விவாகரத்து வழங்க மறுத்த குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1997ஆம் ஆண்டு மணமுடித்து சென்னையை சேர்ந்த தம்பதியருக்கு 9 ஆண்டுகளாக குழந்தையில்லாத நிலையில், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கோரி 2014ல் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றதில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கணவர் தரப்பில் தான் தொடர்ந்த விவாகரத்து வழக்கை எதிர்த்தோ அல்லது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரியோ மனைவி மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும், மனைவி தனியாக சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளார் என்றும், 10 ஆண்டுகள் பிரிந்த நிலையில் திருமண உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக கருதி விவாகரத்து வழங்கலாம் என வாதிடப்பட்டது.

மனைவி தரப்பில்14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், குழந்தை பாக்கியத்திற்காக பல மருத்துவ சோதனைகளை மேற்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் நியாயமான செலவைக்கூட சமாளிக்க முடியாமல் திண்டாடியதாகவும், கணவருடன் சேர்ந்து தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவன் மனைவி இருவரும் சந்தோசமாக வாழக்கூடிய 10 ஆண்டுகளை தவறவிட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதன் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், விவாகரத்து வழங்க மறுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
[4/2, 17:24] Sekarreporter: ஸ்டான்லி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், பைக் ரேசில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மேலும் மூவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் மார்ச் 20ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த புகாரில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பாலாஜி, ஹரீஷ்குமார், சல்மான்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதேபோல பைக் ரேசில் ஈடுபட்டு கைதான பிரவீனுக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் எனவும், அதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை, இந்த மூவரும் பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.

You may also like...