Madras high court october 11th order

[10/10, 21:03] Sekarreporter 1: வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மருமகன் முருகனை காப்பாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் வழக்கு தொடர்ந்து உள்ளார்…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் இருந்து வருகிறார் முருகன். சிறையில் முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா வழக்கு தொடர்ந்து உள்ளார் ..
அந்த வழக்கில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.உடல் எடை குறைந்து விட்டதாகவும் முருகன் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 32 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் எனவே அவருடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி மற்றும் உள்துறை செயலாளருக்கு மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஒரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது.
[10/11, 09:56] Sekarreporter 1: வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராஜா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 17 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அவ்ற்றின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட ஆறு பேருக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே 2 ஜி வழக்கில் 2017ல் டில்லி சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராஜாவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
[10/11, 12:40] Sekarreporter 1: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரம் ஒத்திவைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போதுமனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
[10/11, 15:58] Sekarreporter 1: சாதிச் சான்று வழங்க மறுப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நரி குறவர் சமூகத்தை சேர்ந்தவர். அவரது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி அரசு நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும், மறுக்கப்பட்டதை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்துள்ளார்

சென்னை உயர் நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில் அமைந்துள்ள மாற்று முறை குறை தீர்வு மன்ற கட்டடம் அருகே வந்த வேல்முருகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

அங்கிருந்த காவல்துறை உடனடியாக தடுத்து காயங்களுடன் மீட்ட அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
[10/11, 16:32] Sekarreporter 1: டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனைகள் வழங்கினர். அதற்கு பதிலளித்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், முதலில் ஒரு மாவட்டத்தில் இத்திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி, அதன் முடிவுகளைப் பார்த்து, பிற மாவட்டங்களில் அமல்படுத்துவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கோவை மற்தும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[10/11, 17:05] Sekarreporter 1: கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய நடைமுறையை விரைந்து அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தினந்தோறும் பாலின் தரம், அளவு அடிப்படையில் பாலுக்கான கட்டணம் வழங்கப்படும் வகையில், 2006ஆம் ஆண்டில் தமிழக அரசு கொள்கை வகுத்தது.

பால் கொண்டு செல்வதில் முறைகேடுகள் நடப்பதால் அவற்றை தடுக்கவும், தரத்தை பரிசோதிக்கவும் வெளிப்படையான நடைமுறையை பரிந்துரைக்கும்படி ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த பரிந்துரைப்படி புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி தமிழக அரசு வெளியிட்டது

அதன்படி, பரிசோதனை முயற்சி அடிப்படையில் மாவட்ட அளவில் பாலின் தரம் குறித்த தர சோதனை மேற்கொண்டு, பால் உற்பத்தியாளருக்கு மின்னணு முறையில் தகவல் வழங்கப்படும் என்றும், உரிய தொகையை வழங்கப்படும் எனவும் 2016ஆம் ஆண்டு பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து 2006ஆம் ஆண்டு விதிப்படி அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே தினந்தோறும் பாலின் தரத்தை அடிப்பையாக கொண்டு விலையை வழங்க வேண்டுமென 2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2016 மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு முறைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வெளிப்படைத்தன்மையுடன் தானகவே பிரதி எடுத்து சமந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இருக்கும் தொழில்நுட்பத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் 6 ஆண்டுகளாக அதை அமல்படுத்த நடவடிக்கை எடுகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், வெளிப்படை தன்மையுடன் பரிசோதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டுமென்ற 2016ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
[10/11, 17:43] Sekarreporter 1: அறப்போர் இயக்கத்திற்கு எதிரான 3 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த பதிவுகள் தொடர்பாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ், இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் சார்பில் 3 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[10/11, 18:23] Sekarreporter 1: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர். இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளையின் கல்வி நிறுவன கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை குறித்த விவரங்களை வழங்கக் கோரியும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறக்கட்டளைக்கும், நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் இளங்கோவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் என்.அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறக்கட்டளை தரப்பில் 2006ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஒரு பொது அறக்கட்டளையில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், அறக்கட்டளையின் ஆவணங்களை கோருவதும், மதிப்பீடு செய்வதும் சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அறக்கட்டளை நிர்வாகியாக இளங்கோவன் பொறுப்பேற்றபோது 17 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்த நிலையில், 2017 முதல் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 234 ஏக்கர் நிலம் அறக்கட்டளை பெயரில் உள்ளதாகவும், அறக்கட்டளை நடத்தும் கல்வி நிலையங்களில் 14 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பிற்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, அவற்றை ஆய்வு செய்யவே சம்மன் அனுப்பப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்படவராக சேர்க்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அறக்கட்டளை கட்டடங்களை மதிப்பீடு செய்வதையும், ஆவணங்களை கோருவதையும் ஆட்சேபிக்க முடியாது என்றும், புலன் விசாரணையின்போது ஆதாரங்களை சேகரிக்கும் விசயத்தில் தலையிட முடியாது என்றும் கூறி, அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...