Madras high court news october 6th

[10/5, 11:52] Sekarreporter.: தமிழகத்தில் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் முன்னாள் எம் எல் ஏ இல்லத் திருமணத்திற்கு வந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொடிக்கம்பங்கள் பேனர்கள் வைக்க கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இது தொடர்பான ஒரு வழக்கில் திமுக தரப்பில் பேனர்கள் வைக்க படமாட்டாது என்று உத்தரவாதம் அளித்து உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மனுதரார் தரப்பில் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த காண்ட்ராக்டர் தான் 12வயது சிறுவனை பணியில் அமர்த்தி இருக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டே முதல்வர் முக.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் எனக் கூறிய உள்ளதாகவும், கட்சி தொண்டர்களை பேனர்கள் வைக்க கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தான் சென்ற போது வழியில் ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, திமுக ஆகியவை ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[10/5, 12:49] Sekarreporter.: நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்கு தொடர்ந்தனர்.

குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் எம்.டி.டி. 23 புலியை ஆட்கொல்லி புலியாக கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு, பின்னர் புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது

வனத்துறை தரப்பில் அரசு பிளீடர் ஆஜராகி, புலியை கொல்லும் திட்டம் இல்லை என்றும், அதை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். அதன் கழுத்தில் ஏற்கனவே காயம் உள்ளது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக
கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

புலியின் நடவடிக்கை கண்காணித்து, அதை பிடித்த பிறகு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

புலியை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[10/5, 14:30] Sekarreporter.: சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர், தடுப்புசி செலுத்தியவர்கள் எத்தனை பேர் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் சீர் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த 396 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில், அரசால் மீட்கப்பட்டவர்களில் சென்னையில் ஒருவர் கூட இல்லை எனத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சென்னையில் இருப்பவர்களை கண்டறிய தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டுமெனவும், அவ்வாறு மீட்கப்படுபவர்களை முகாம்களில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேல்பாக்கத்தில் உள்ள அரசு காப்பகத்தை சீரமைக்கவும், புதிய கட்டிடம் கூட கட்டலாம் எனவும் ஆலோசனை தெரிவித்த நீதிபதிகள், சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர், தடுப்புசி செலுத்தியவர்கள் எத்தனை பேர் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[10/5, 17:03] Sekarreporter.: புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்ப பெறுவதாக புதுவை மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுவையில்  நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும்  வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக கூறி முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ,ஆஜராகி வழக்கு நிலுவையில் இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று  புதுவை  அரசுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதுவையில் இப்போதைக்கு  உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை என்பதால், அக்டோபர் 21 முதல் நடத்த உள்ள தேர்தலை தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை வழக்கை அக்டோபர் 7 தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள் வேட்புமனு பெறுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்தனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புதுவை அரசு சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக புதுவைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் புதிய அறிவிப்பாணை வெளியிட புதுவை மாநில தேர்தல் ஆணையம் அனுமதி கேட்டுள்ளதாகவும்,வார்டு குளறுபடிகளை சரிசெய்து புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு,புதிய அறிவிப்பாணை வெளியிட அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்தனர்.
[10/5, 17:36] Sekarreporter.: சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டதாக
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய
நெடுஞ்சாலையில், மதுரவாயல் – வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக,
தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என கடந்த 2019 ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக அங்கு 50 சதவீத சுங்ககட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரவாயல் வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதனால் கடந்த இரு ஆண்டுகளாக 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த இந்த இரு சுங்கச்சாவடிகளில், இனி 100 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்கப் படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

You may also like...