Madras high court news

[8/17, 10:53] Sekarreporter: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கனவே அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2015, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்த புகார்களில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து சென்ற பிறகும் 20 நடன நிகழ்ச்சிகளை தன்னுடைய பள்ளியில் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபாவை குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கைதுக்கு பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் அவர் வாதிட்டார்.

10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலேயே வெவ்வேறு மாதங்களில் 3 முறை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த மனுக்களில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவின் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[8/17, 13:11] Sekarreporter: வருமான வரிக்கு வட்டி செலுத்திவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடிகர் ஆர்.எஸ்.சூர்யா வீட்டில் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008 ம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும்,வருமான வரி தரப்பிலும்  மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2007-08, 2008-09 ம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி கடந்த 2018 ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தீர்ப்பாய கால தாமதத்திற்கு வருமானவரித் துறையே காரணம் என்பதால் வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தர வில்லை எனவும், சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்க வில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென வருமான வரி தரப்பில் வாதிடப்பட்டது.

வருமானவரித்துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[8/17, 16:03] Sekarreporter: சிவசங்கர் பாபா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி உத்தரவு விவரம்….

நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்து தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், சிவசங்கர் பாபாவிற்கு ஜாமின் வழங்கினால் விசாரணைக்கோ, பாதிக்கப்பட்டவகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.

மக்களின் மனதிற்குள் இருக்கும் பிரச்சைகளுக்கு தீர்வளிப்பதாகவும், ரட்சிப்பதாகவும் கூறும் போலி சாமியார்களும், மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளனர். விரக்தியில் இருக்கும் மக்களின் மன பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் கூறும் போலி சாமியார்கள் மற்றும் குருக்களின் கைகளிலேயே மக்கள் சிக்கிக்கொள்கின்றனர். இந்த சாமியார்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையை பயன்படுத்தி உச்சகட்ட அளவில் அவர்களை சுரண்டுகின்றனர். பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கைக்கு சாமியார்கள் துரோகம் செய்கின்றனர்

அனைத்து தரபட்ட வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுகின்றனர். தங்களின் உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியார்களிடம் இருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவர்களை நம்பும் பக்தர்களுக்கு பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கிறதோ இல்லையோ, துரோகம் செய்யும் சாமியார்கள் மக்களை பயன்படுத்தி அதிக அளவிளான சொத்துகளையும், அதிகாரத்தையும், செல்வாக்கையும் சம்பாதித்து விடுவார்கள்.
[8/17, 16:03] Sekarreporter: ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பதாக பொதுமக்கள் போராட்டம், அவர்கள் மீதான துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூடி உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரி பேராசிரியர் பாத்திமா தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவிற்கு தமிழ்நாடு அரசும் மற்றும் வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து தமிழ்நாடு அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே ஆலையை மூட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவு பிறபித்தாலும், அதுசம்பந்தமாக முறையீடு செய்து, வழக்கை முன்கூட்டியே பட்டியலிட கோரிக்கை வைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
[8/17, 16:10] Sekarreporter: இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 6 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடலூரை சேர்ந்த கே.எஸ்.குருமூர்த்தி மற்றும் அர்ஜுனன் இளையராஜா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் போன்ற மதங்கள் இருந்தாலும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை முறைப்படுத்த அரசு எவ்வித அக்கறையை காட்டாத நிலையில், இந்துக்கள் வழிபடும் கோவில்களை கட்டுப்படுத்த மட்டும் அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டுவம்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்து கோவில்களை முறைபடுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அறநிலையத்துறை சட்டம் கொண்டு வந்த நோக்கம் மாறி, கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தாலும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், நிதி முறைகேடு நடப்பதும், தவறாக பயன்படுத்தப்படுவதும் தொடர்கதையாக இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதசார்பற்ற நாடு என்று சொல்லுகின்ற நிலையில் இந்து சமயக் கோயில்களில் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்துவது என்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அறநிலையத்துறை சட்டத்தின் மூலம் கோயில்களை நிர்வகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்றும், ஆனால் கோயில்களை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது என்பது அனுமதிக்க முடியாது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரானைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.பாஸ்கர், அரசு தரப்பில் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதிகள், வழக்கு குறித்த ஆவணங்களை அரசுத் தரப்புக்கு வழங்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
[8/17, 18:08] Sekarreporter: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது என தெரிவித்தார். 27 சதவீத இட்ச் ஒதுக்கீடு எப்படி முடிவெடுக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றார்.

27 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வலியுறுத்தினார்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் மாநில இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் எனத் தெரிவித்த மத்திய அரசு, அதை மீறும் வகையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது எப்படி எனக் கேள்வி எழுப்பினார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், ஒபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் என்பதை 40.5 சதவீதமாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுப்பிட்ட நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை பொறுத்தவரை, இந்த இடங்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனவும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை எந்த அடிப்படையில் நிரப்புவது என முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு 22.5 இட ஒதுக்கீடு வழங்கிய பின், 50 சதவீதத்தில் மீதமுள்ள 27.5 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 1986ம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் அமலுக்கு வந்ததாகவும், 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் 1993ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போது, அதை பின்பற்ற வேண்டும் அப்போது யாரும் கோரிக்கை விடுக்கவில்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை சேர்க்கும் போது, மொத்த இட ஒதுக்கீடு 59.5 சதவீதமாகி விடும் எனவும், 50 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பை மீறும் வகையில் உள்ள இந்த இட ஒதுக்கீடு குறித்து நாளை விளக்கமளிக்க மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை பிற்பகல் 2:15க்கு தள்ளிவைத்தனர்.
[8/17, 19:03] Sekarreporter: கொரனோ தொற்று பாதித்து உயிரழிந்தவரின் உடலை 2 மாதங்கள் கழித்து கொடுத்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அலமேலு என்பவர் கொரனோ தொற்று பாதித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த மே 19ம் தேதி அனுமதிக்கபட்டார்.சிகிச்சை பலனின்றி மே 22ம் தேதி உயிரிழந்த அவரது உடலை எரித்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தநிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி அலமேலுவின் உறவினர்களை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம் உடலை பெற்றுகொள்ளுமாறு தெரிவித்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்ததையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். உடலை எரிக்க 3ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் அளித்தனர்.

இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்தின் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
[8/17, 19:03] Sekarreporter: செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் கையாண்டத்ல் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்யும்படி தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 64 கோடி ரூபாய் அளவிற்கு RTPCR கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நாளொன்றுக்கு 1500 முதல் 2000 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றரை லட்சம் மதிப்புள்ள ஒரு கருவியில் 4 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரு கருவி மூலம் ஒரு மாதிரி எடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் 5 கோடி ரூபாய் அளவிற்கான கருவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பரிசோதனை கருவிகள் கையண்டதில் முறைகேடுகள் இருப்பது பேராபத்து என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவத் துறை செயலாளர் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். அந்த ஆய்வில், முறைகேடுகளோ, குறைபாடுகளோ கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...