M s ramesh judge bench senior advocate vijaya narayanan filed report
பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை பணியில் அமர்த்துவோம் என கூறுவது தங்களை மிரட்டுவது போல உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார். அதேசமயம், தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், இரண்டு மண்டலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 3,809 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில் இதுவரை 2,688 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர் சங்கத்தை சேர்ந்த 821 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டதில் 421 பேர் பணிக்கு வந்துவிட்ட நிலையில் 400 பேர் பணிக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாதத்தை தொடர்ந்த மூத்த வழக்கறிஞர், 400 பேர் வேலைக்கு வரவில்லை என்றால் வேறு ஆட்களை கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டிய நிலை உள்ளதாக கூறினார்.
தனியார் நிறுவனத்தின் இந்த நிலைப்பாடு சரியானது தான் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள் தரப்பு வழக்கறிஞர், இது தங்களை மிரட்டுவது போல உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, பணியில் சேர்ந்த பின்னர் உங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாமே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.