Judge sathiskumar காட்டம். நீதிபதி, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் வேண்டாம்.pp.mukilan
இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுரை ஆதீனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக (2025) மே 2ம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார்.
உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு சாலையை கடந்து நிற்காமல் சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், தன்னை திட்டமிட்டே
கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் தன்னை நீண்ட தூரம் தொடர்ந்து வந்தது. தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தருந்தனர். முகத்தில் நீண்ட தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து விசாரணை செய்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிவேகமாக காரை ஓட்டி சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆதீனமோ? அவரது ஆதரவாளர்களோ? காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த முபாரக் என்பவரின் கார் மீது அதிவேகமாக சென்ற ஆதீனத்தின் கார் மோதியது என்பதையும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது தீமைக்கு வழிவகுக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தனக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதினம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் முன்ஜாமீன் வழங்கி ஜூலை 17ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விபத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் பதிலளித்ததாகவும், தனது தரப்பில் இருந்து யாரையும் குறிப்பிட்டு அறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பிரிவினருக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. தனது கருத்துக்களால் எந்த வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை. தன்னை துன்புறுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமூக ஆர்வலரான தன்னையும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என பியூஸ் மானஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்காத நீதிபதி, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் வேண்டாம்.
உங்களை வழக்கில் சேர்க்க முடியாது என தெரிவித்தார். மேலும், காவல்துறை இந்த வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செ 15ம் தேதி ஒத்திவைத்தார். அதுவரை மதுரை ஆதீனத்தின் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டார்.