Judge krishnan ramasamy. நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி அவசியமா?” – சிப்காட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய விளக்கம்!

“நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி அவசியமா?” – சிப்காட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய விளக்கம்!

தொழிற்பேட்டைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, எந்தக் கட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) பெற வேண்டும் என்பது குறித்துச் சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. நிலத்தை எடுக்கும் நடைமுறைக்கும், அதில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கும் இடையிலான சட்ட ரீதியான வேறுபாட்டை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் மணலூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில், சுமார் 4,326 ஏக்கர் நிலத்தைச் சிப்காட் தொழிற்பேட்டைக்காகத் தமிழக அரசு கையகப்படுத்தியது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது செல்லாது என நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ:

நிலம் கையகப்படுத்தும் ஆரம்பகட்ட நடைமுறைகளைத் தொடங்குவதற்குச் சுற்றுச்சூழல் அனுமதி முன்கூட்டியே பெற வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்; ஆனால், அந்த நிலத்தில் உண்மையான கட்டுமானப் பணிகளையோ அல்லது நிலத்தைத் தயார் செய்யும் பணிகளையோ தொடங்குவதற்கு முன்பாகக் கட்டாயம் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்துவதற்கான ‘பிரிவு 3(1)’ அறிவிப்பை வெளியிடுவது என்பது கட்டுமானப் பணியாகக் கருதப்படாது. எனவே, அனுமதி இல்லாமலேயே இந்த அறிவிப்பை வெளியிடுவது சட்டப்படி செல்லும்.

கையகப்படுத்தப்பட்ட நிலம் ஒருவேளை பயன்படுத்தப்படாமல் போனால், அதனை மீண்டும் உரிமையாளரிடமே ஒப்படைக்கவும், இடைப்பட்ட கால இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் இடமுள்ளது என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பசுமைத் தீர்ப்பாயத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், அது நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தடுத்து நிறுத்தாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம், தமிழகத்தில் சிப்காட் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தடையின்றித் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com