Health inspecter case smsj j bench order notice

சுகாதார ஆய்வாளர் பணிக்கு புதுக்கோட்டை மையத்தில் தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றனரா என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருந்த 1,429 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 84 மையங்களில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வு, முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கலாம் எனவும்; அந்த பணி ஆணைகள் சிபிசிஐடி விசாரணைக்கு உட்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தீர்த்தகிரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியம், தேர்வு நடைபெற்ற 84 மையங்களில், புதுக்கோட்டையில் தேர்வு நடைபெற்ற ஒரு மையத்தில் மட்டும் முறைகேடு கண்டறியப்பட்டதாக கூறினார். அந்த மையத்தில் மொத்தம் 14 பேர் தேர்வெழுதியாகவும், அவர்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.

மேலும், முறைகேடு தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் நிலுவையில் இருப்பதாகவும் தற்போது வழங்கப்படும் இந்த பணி ஆணை இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டு தான் ஆணை வழங்கப்பட்டதாக கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மொத்தம் ஐந்து மையங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள், புதுக்கோட்டை மையத்தில் தேர்வெழுதிய 14 பேரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நான்கு பேரை தவிர மற்றவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றார்களா? என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com